கடிதம்.....

நீண்ட நாட்களுக்குப் பின் Whatsup கணக்கை திறந்து பார்த்தேன். இங்கிருக்கும் மொபைல் எண்ணை வெளிநாட்டிற்கு செல்பவர்கள் அப்படியே பயன்படுத்த இயலாது. வேண்டும் என்றால் டம்மியாக ஒரு எண் தருகிறார்கள். அதற்கும் நிறைய வரைமுறைகள் வைத்திருக்கிறார்கள். எனது பழைய மொபைல் எண்னைப் பெறுவதற்கு நீண்டநாள் ஆகிவிட்டது.
தற்போது Whatsup,Telegram, போன்ற ஆண்ராய்டு மென்பொருள்களை கணினியிலும் பயன்படுத்தலாம். அதற்கு அவசியம் இல்லாததால் முயற்சி செய்யாமல் விட்டிருந்தேன். தீபாவளி வாழ்துக்கள், Hai.. how r u... ஒன்றிரண்டு புகைப்படங்கள், ஜோக், வீடியோ, திருமண பத்திரிக்கை என Inbox வழிந்திருந்தது. ஒவ்வொன்றாய் படித்து சிலவற்றிர்க்கும் பதில் அனுப்பினேன். அப்படி நிறைந்திருந்த குறுஞ்செய்திகளில் மதுமிதா அனுப்பிய செய்தி என்னை கவர்ந்தது.

அன்புள்ள,

அண்ணா நலம் நலம் அறிய ஆவல்.
அப்பாவுடன் கடைசியாக நீங்கள் பேசும்போது  என்னை விசாரித்ததாக கூறினார்.
நாங்கள் நலம். எனது படிப்பு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. உங்கள் புத்தகங்களை பாதியளவு படித்து விட்டேன். புத்தகங்களைப் பற்றி நானும் அப்பாவும் தினமும் விவாதித்துக் கொள்வோம். தங்களின் Blog-ன் பதிவுகளை படிக்கிறேன் உங்களை தொடர்புகொள்ள நானும் அப்பாவும் பலமுறை முயற்சித்தோம். நீங்கள் தற்போது எங்கு இருக்கிறீர்கள். எப்படியும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். சென்னை வந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.

என்றும் அன்புடன்
மது.

கிட்டத்தட்ட ஒரு கடிதத்தை பிரித்து படிப்பதுபோல் உணர்ந்தேன். Hru. Omg.. gn8..என சுருக்கமாக வரும் செய்திகளின் நடுவே இந்த புதுமையான கடிதம் என்னை கவர்ந்தது.
நண்பர் ஒருவர் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார் பழைய டைரியில் இருக்கும் கடிதத்தை பிரித்து படிக்கத் தொடங்கினார். என்ன,ஏதாவது ரகசிய கடிதமா? என்றேன். இல்லை தேவ் இது நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் அப்பா எழுதிய கடிதங்கள். எனக்கு சோர்வாக இருக்கும் தருணங்களில் படித்து ஆறுதல் கொள்வேன் என என்னிடம் நீட்டினார். கடிதங்களுடன் ஒன்றிரண்டு பொங்கல் வாழ்த்துக்களும் இருந்தது. தற்போது கடிதம் எழுதும் பழக்கம் நம்மில் முற்றிலும் தொலைந்தே போய்விட்டது. பத்து வருடங்களுக்கு முன் கடிதம் மடுமே தூரத்து உறவுகளை இணைத்திருந்தது.

I am suffering from fever என எழுதிய Leave letter தான் ஒவ்வொருவரும் முதலில் எழுதிய கடிதமாக இருக்கக்கூடும். சிறுவயதில் , வெளிநாட்டில் வேலை செய்த மாமாவிடம் இருந்து வரும் கடிதமே எங்கள் வீட்டில் அதிகம் நிறைந்திருந்தது. நான் தனிப்பட்ட ஒருவருக்காக எழுதிய முதல் கடிதம் அவருக்காகத்தான்.
நாங்கள் வசித்த காலனியில் பக்கத்துவீட்டில் சாந்தா அத்தை குடியிருந்தாள் மாதம் ஒருமுறை வெளிநாட்டிலிருக்கும் தன் மகனுக்கு கடிதம் எழுத என்னை அழைப்பாள். Air mail -ன் பக்கங்களில் அவள் கூறுவதை எல்லாம் அப்படியே எழுதுவேன் கடைசியாக கொஞ்சம் பக்கத்தையும் நான் கொண்டுவந்த பேனாவையும் வைத்துவிட்டு போகச் சொல்லுவாள். அந்த பக்கங்களில் யாருக்கும் வெளிப்படுத்தாத அவள் சோகங்களை நிரப்பியிருப்பாள்  என நம்புகிறேன்.

புறாக்களின் காலை நம்பி இருந்த சங்ககாலத்திலிருந்து கடிதம் ஒன்றே காதலின் அச்சாணியாக சுழன்றிருக்கிறது. "காதலித்து பார் தபால்காரன் தெய்வமாவான்" என வைரமுத்து அனுபவித்து எழுதி இருக்கிறார். கடிதமும் காதலும் பிரிக்க முடியாதவையாக இருந்திருக்கிறது. உன்னோட கையெழுத்து அழகாக இருக்கிறது என்று காதல் கடிதம் எழுத நண்பர்கள் தொந்தரவு செய்வார்கள். அடுத்தவர் காதலுக்கு கொஞ்சம் மானே! தேனே! பொன்மானே! போட்டு கடிதம் எழுதி இருக்கிறேன். எனக்காக ஒன்றும் எழுதியதில்லை, வந்ததுமில்லை. சில அண்ணன்களின் காதலுக்கு அனுமாராகவும் இருந்ததுண்டு.

காதல் கடிதம் என்றதும் சுவாரசியமான கல்லூரிகால கதை நினைவுக்கு வருகிறது. நண்பன் காதலில் விழுந்திருந்தான் அவன் காதலிக்கு தினமும் கடிதம் எழுதுவான். பெண்களை உற்று பார்த்தாலே அருவா வீசும் காலம் அது கடிதத்தை எப்படி சேர்பது? அதற்கு அவன் புதுவழியை கண்டுபிடித்திருந்தான். தினமும் அவன் காதலி டீயூசன் செல்லும் வழியில் இருக்கும் புளிய மர பொந்திற்குள் கடிதத்தை வைத்துவிடுவான். அவளும் இவன் கடிதத்தை எடுத்துவிட்டு நேற்றைய பதில் கடிதத்தை வைத்துவிட்டு செல்வாள். புளிய மரத்தோடு காதலும் பசுமையாக வளர்ந்தது. ஒருநாள் கடிதத்தை எடுக்க பொந்திற்குள் அவள் கை நுழைத்த போது கூடவே மற்றுமொரு கையும் நுழைந்தது. அது அவள் தகப்பனின் கை அதற்கு பின் அவர்கள் காதல்?  முடிவு சொல்லவா வேண்டும்..

Postman. A Letter to my Dad.. Last letter. என கடிதத்தை பற்றிய திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவந்த சேரனின் பொக்கிஷம் மிகச் சிறந்த திரைப்படமாக கருதுகிறேன். இறந்துபோன தன் தந்தையின் பழைய பெட்டியை எதேச்சயாக திறக்கும் மகன் அவரின் டைரியையும் ஒருசில கடிதங்களையும் பார்க்கிறான். டைரியை படிக்கும் போது தன் தந்தையின் கடந்தகால காதலை அறிந்து கொள்கிறான். தொலைதொடர்பு வசதி இல்லாத அந்த கால கட்டத்தில் அவனது தந்தை மருத்துவமனையின் சந்திக்கும் இஸ்லாமிய பெண்ணை பார்கிறார். புத்தகம்,பழமை என அவர்களின் பேச்சு  மருத்துவமனை தாண்டி கடிதம் எழுதும்வரை தொடர்கிறது. கொல்கத்தாவில் பனிபுரியும் அவருக்கும் நாகூரில் வசிக்கும் பெண்ணுக்கும் இடையில் கடிதம் ஒன்றே நட்பை இணைக்கிறது. நாளடைவின் நட்பு காதலாக மாறுகிறது. தபால்காரன் தெய்வமாகிறான். பெண்ணின் வீட்டில் இருப்பவர்கள் காதலுக்கு எதிர்க்கிறார்கள் தன்னுடைய சமுதாயத்திற்கு தெரிந்தால் அவமானம் மட்டுமே மிஞ்சுமென ஊரையே காலி செய்கின்றனர். தனக்கிருந்த ஓரே முகவரியையும் தொலைத்துவிட்டு தவிக்கிறான். கடிதம் நின்றுவிடுகிறது. அவளைத்தேடி அலைகிறான். சந்தர்ப்பவசத்தால் வேறொரு பெண்னை திருமணமும் செய்து கொள்கிறான். தன் வாழ்நாள் முழுவதும் அவளை தேடுவதை நிறுத்தாத அவன் உலகைவிட்டும் பிரிந்துவிடுகிறான். முகவரி தெரியாத அந்த காதலிக்கு அவன் எழுதிய கடிதங்களையும் டைரியையும் எடுத்துக்கொண்டு மகன் இப்போது தேடத் தொடங்குகிறான். தற்போது உள்ள நவீன காலகட்டத்தின் வசதியோடு அப்பாவின் காதலியை கண்டுபிடிக்கிறான். மலேசியாவில் வசிக்கும் அவளைத்தேடி அங்கு சென்று தன் தந்தையின் கடிதத்தை ஒப்படைக்கிறான். அவனை வழி அனுப்பிவைத்துவிட்டு வரும் வழியில் அவள் அந்த கடிதங்களை படிகிறாள். படித்துவிட்டு அப்படியே சாய்ந்து கண்மூடுகிறாள் திரை மெல்ல இருள்கிறாது. காற்றில் எழுதும் காதல் கடிதம்கூட காதலை சென்றடையும். நாமெல்லாம் தவறவிட்ட மிகச் சிறந்த திரைப்படம்.
கடிதம் உறவுகளின் பாலம், வார்த்தைகள் அதனை தாங்கி நிற்கிறது. கடிதம் உள்ளங்களின் கண்ணாடி பிரதிபளிப்பு.

ஒன்றிரண்டு பொங்கல் வாழ்த்து, இன்டெர்வியூ லெட்டர் தவிர்த்து எனக்கு பெரிதாக எந்த கடிதமும் வந்ததில்லை. மதுமிதாவின் குறுஞ்செய்தி பார்தவுடன் கடிதத்தை பற்றிய நினைவுகளில் மூழ்கிப் போகிறேன். தற்போது கடிதம் எழுதும் ஊடகம் மாறி இருக்கலாம் வார்த்தைகள் அப்படியேதான் இருக்கிறது. அம்மா, அப்பா, நண்பன், காதலி, காதலன், என உறவுகளுக்கு இதுபோல் கடிதம் எழுதினால் நன்றாக இருக்குமென தோன்றியது உடனே அந்த அன்பு தங்கைக்கு பதில் எழுதினேன்.
வேறு யாருக்காவது கடிதம் எழுதலாம் யாருக்கு எழுதுவது?.

அன்புள்ள,

அம்மாவிற்கு தேவ் எழுதிக்கொண்டது நலம் நலமறிய ஆவல். அங்கு மழை எப்படி உள்ளது. இங்கு கொட்டிக் கொண்டிருக்கிறது.
மழைக்காலம் வந்தால் அப்பாவிற்கு இருமல் வந்துவிடும் கைவசம் மருந்தை வைத்துக்கொள். நீயும் மெலிந்து போயிருந்தாய் உன் உடம்பையும் பார்த்துக்கொள். பப்பி குட்டி போட்டுவிட்டதா?. நீ அனுப்பிவைத்த முறுக்கு, தீபாவளி பலகாரம் எல்லாம் தீர்ந்துவிட்டது. வழக்கம்போல் நீ அனுப்பிய GJ -வை (Globe jamon) கஸ்டம்ஸ் பிடிங்கி கொண்டார்கள். ...
...
...
அனைவரையும் கேட்டதாக கூறவும் மற்றவை நேரில்.

அன்புடன்
தேவ்.

- (அம்மாவிடம் இருந்து பதில் வந்தது. என்னாச்சிடா உனக்கு?
நேற்றுதானே ஆன்லைனில் பேசுன).,