☰ உள்ளே....

சிறுதுளி பெருவெள்ளம் (சென்னை அனுபவம் -2)...


பகல் பொழுதில் நன்றாக உறங்கி இருந்தேன். சங்கர் அண்ணாவிற்கு போன் செய்ததும் என்னை அழைத்துவர கார் கொடுத்துவிட்டிருந்தார். இரண்டு பெண்கள், சங்கர் அண்ணா அவரது நண்பர்கள் என மொத்தம் பதினாறு பேர் கோவையைச் சேர்ந்த ஒருரின் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்திருந்தனர்.  வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து குடும்பங்களாக வந்து தங்கியிருந்தனர். சங்கர் அண்ணாவின் நண்பர்களின் உதவியால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தனியாக வேன் வைத்து அழைத்து வந்திருந்தனர்.  


மொத்தம் 60 குடும்பங்கள் இருக்கும் 220 நபர்களை தாங்கிக் கொண்டிருந்தது அந்த பழைய திருமணமண்டபம். இரவு உணவிற்காக சமையல் செய்யத் தொடங்கி இருந்தனர். அங்கு தங்கி இருந்தவர்களும் சமையலுக்கு உதவினர். சங்கர் அண்ணா அவரது குழுவிற்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். நீர் மேலான்மையைப் பற்றி நன்கு அறிந்தவர் என பாராட்டினார். சற்று கூச்சமாகவே இருந்தது. எனது தொழிலே அதுதான் பாராட்டிற்கு உகந்தவனா எனத் தெரியவில்லை. எத்தனை ஆமைகளை தெரிந்து வைத்திருந்தும் என்ன பயன்? தற்போது இங்கிருக்கும் நிலமையை என்னை போன்றவர்களால் என்ன செய்யமுடியும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அடுத்த நாற்பத்தெட்டு மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்ற செய்தி மேலும் கவலையடைய செய்தது.

தமிழ் நாட்டின் இயற்கை அமைப்பை பொருத்தவரையில் மழை மறைவு பிரதேசம் தான். இங்கு மழை மூண்று கால கட்டங்களாக பொழிகிறது. வருடா வருடம் மழை பொழியும் காவிரி டெல்டா பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும், நிவாரணம் கொடுப்பார்கள், சுருட்டுவார்கள், பள்ளி, கல்லூரி விடுமுறை விடுவார்கள், ரமணன் டிவியில் வருவார், டெங்கு, சிக்கன் குனியா என எதாவது புதுசு புதுசா வந்து தொலைக்கும். நமக்கு தெரிந்த மழைக்காலம் அவ்வளவுதான். ஆனால் இந்த வருடம் சற்று மாறுதலாக இயற்கை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. குறிப்பாக சென்னைவாசிகளுக்கு. சென்னைக்கு மட்டும் ஏன் இந்த துயரம்?

இந்த வருட மழையை அறிஞர்கள் நூற்றாண்டுகால மழை என்கிறார்கள். அதாவது கடந்த நூறு ஆண்டுகளில் பொழிந்த அதிகபட்ச மழை என்று அர்த்தம். வழக்கமாக நவம்பர் மாதத்தில் சென்னையில் பொழியும் மழை அளவு சராசரி 407 மிமீ. ஆனால் இந்த வருடம் நவம்பர் மாதம் 494 மிமீ. டிசம்பர் தொடங்கியும் மழை விட்டபாடில்லை. டிசம்பரின் முதல்நாள் பதிவான மழை அளவு 494 மிமீ. இதுவரை பொழிந்த மழையின் சராசரி 1219 மிமீ என்கிறார்கள். மழை தொடரும் என்ற செய்தி மேலும் கிலியை ஏற்படுத்தியது.

நமது தமிழ்நாட்டின் தகவமைப்பை நன்கு தெரிந்து வைத்த நம் முன்னோர்கள் பல இடங்களில் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் அணைகள் என கட்டி வைத்து மழை நீரை சேமித்தனர். வெள்ள காலங்களில் ஆறுகளோடு இணைத்து கடலில் கலக்க விட்டனர். இது எல்லா மாவட்டத்திற்கும் பொருந்தும். சென்னைக்கு வருவோம், சென்னையை பொருத்தவரை ஏரிகள்தான் பிரதானம். மழைநீர் ஏரிகளில் தங்கும், கொள்ளவு அதிகமானால் ஆறுகளுக்கு திரும்பும் கால்வாய்களும் சிறு வாய்க்கால்களும் நகரத்தின் மழைநீரை கொண்டுவந்து ஆற்றில் கலக்கும், ஆறு கடலுக்கு போய் சேரும். இப்படித்தான் நம் முன்னோர்கள் சென்னையிலும் வடிவமைத்திருந்தனர். அதன் படிதான் இன்றைக்கும் மழைநீர் போய்க் கொண்டிருக்கிறது. 

சென்னையில் தற்போது பூண்டி, செம்பரபாக்கம், சோழாவரம் உட்பட 15 ஏரிகளும், அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு என 3 ஆறுகளும், வடக்கு பக்கிங்காம், மத்திய பக்கிங்காம், தெற்கு பக்கிங்காம், ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், வீராங்கால், கொடுங்கையூர், கேப்டன் கால்வாய், வேளச்சேரி கால்வாய் எனா 9 கால்வாய்களும், 512 சிறு ஓடைகளும் இருக்கின்றன. ஆனால் தற்போது ஏரிகள், ஆறுகள், கால்வாய்களின் தடம் அற்றுப்போனதால் அது போக வழியிடம் இல்லாததால் காட்டுயானை ஊருக்குள் வந்த கதையாகிப் போனது.
சென்னைக்கு வெள்ளம் புதிது அல்ல. 1943, 76, 85, 2008 -ல் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. 1943, 76 -ல் கூவத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி இருக்கிறது. இதைத் தாண்டி வரலாற்றில் இந்த வருட வெள்ளம்
நீங்காத இடத்தை பெரும் என்பதில் சந்தேகமில்லை. சென்னையில் கொளத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், அருகம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், வேளச்சேரி, மாம்பலம் உட்பட்ட 36 இடங்களை அபாயகரமான இடமாக அறிவித்திருந்தனர். "எல்லோருக்கும், எல்லாவற்றிக்குமான" அலட்சியமே இதற்கு காரணம் என நினைக்கிறேன்.

எல்லோருக்குமான உணவு தயாராகி இருந்தது. பரிமாறியபின் நாங்களும் சாப்பிட்டு முடித்தோம்.
சமையல் பொருட்கள் மற்றும் அரிசி ஈரோட்டை சேர்ந்த ஒருவரின் கடையிலிருந்து வந்தது. கேஸ் மற்றும் அடுப்புகளை அண்ணாவும் அவர்களது நண்பர்களும் ஆளுக்கு ஒன்றென கொண்டு வந்திருந்தனர். சமையல் செய்வதற்கென அழைத்துவந்த இருவரும் பின்நாளில் இதற்கென எந்த சம்பளமும் வாங்கவில்லை என தெரிந்து கொண்டேன். அண்ணாவின் சிறிய இந்த குழுவில் எல்லோரும் தன்னலமற்று இருந்தனர். செல்பி எடுத்து Facebook -ல் போட்டு லைக் வருமா இல்லையா என பார்க்கும் நபர் ஒருவர் கூட இல்லை.இந்த குழுவில் இரண்டு பெண்களும் இருந்தனர். மண்டபத்தில் போதிய இடமில்லாததால் வேனிலே படுத்து உறங்கியதையும் அறிவேன்.

மளிகை சாமான்கள், மருந்து பொருட்கள், பால், மற்றும் தேவையான பொருட்களுக்கு பட்டியல் தயார் செய்யப்பட்டது.
என்ன என்ன செய்யவேண்டும் என்பதுவும் பட்டியல் போடப்பட்டது.
உனக்கு எதாவது தோன்றினால் சொல்லுடா என சங்கர் அண்ணா கேட்டார். மண்டபம் ஏற்கனவே நிறைந்து விட்டிருந்தது. புதிதாக வருபவர்கள் யாருமில்லை இவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என அண்ணாவிடம் கூறினேன். ஊர் ஊராக போய் தண்ணீரை சேமியுங்கள் இயற்கையை போற்றுங்கள் என பேசும் அதே வேலையயா? என கேட்டார். இதுவும் அதுபோல்தான் அண்ணா கொஞ்சம் வேறுமாதிரி என சொன்னேன். இந்த சமயத்தில் இது வேண்டாமே. நீ வேண்டுமென்றால் போய் சொற்பொழிவாற்று என்றார்.
சிறுவயதுமுதல் கல்லூரிக்காலம் வரை இதுமாதியான பேரிடர் காலங்களில் களத்தில் பணியாற்றிய அனுபவாம் உண்டு சுனாமி மீட்பு குழுவிலும் இருந்திருக்கிறேன். அங்கு கற்றுக்கொண்டவை ஏராளம். முதலுதவி, மற்றும் தீயணைக்கும் பயிற்சியும் பெற்றிருக்கிறேன். கற்றது எதையும் பயண்படுத்தாமல் இருப்பது கேவலமாக கருதுகிறேன். தூரத்தில் இருந்தால் கூட பரவாயில்லை பக்கத்தில் படுத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பதில் நாட்டமில்லாததால்தான் சங்கர் அண்ணாவை தேடிவந்தேன்.
- தொடரும்.