☰ உள்ளே....

சிறுதுளி பெருவெள்ளம் (சென்னை அனுபவம்-1).

தீபாவளி விடுமுறை முடிந்து தற்போதுதான் வேலைகளைத் தொடங்கினோம். மின்னஞ்சலில் அவசர செய்தி வந்தது "உடனே புறப்பட்டு சென்னை வரவும்".


தினம் தினம் லட்சக்கணக்கானோர் வந்து போகும் தலைநகருக்குள் செல்ல எந்த வசதியும் அற்றுப் போயிருந்தது. வான்வழி போக்குவரத்து கூட திருச்சி வந்து அங்கிருந்து செல்ல வேண்டியதாக இருந்தது. என்னுடன் சேர்த்து மொத்தம் மூன்று பேர் திருச்சியிலிருந்து புதுச்சேரி வந்தடைந்தோம் அங்கு தனி ஜீப் தயார் நிலையில் இருந்தது சென்னையை நோக்கி புறப்பட்டோம். சுனாமி பேரழிவிற்கு பின் இப்படி ஒரு அழிவுக் காட்சியை நான் கண்டதில்லை. சிறிது நாட்களுக்குஎனது பக்கங்களில் துவாளு என்ற நாட்டைப்பற்றியும் Global warming என்பதற்கு பலியாகக் கூடிய முதல் ஆடு எனவும் எழுதி இருந்தேன். கடைசியாக அந்த பலிஆடு சென்னை என மாற்றப்பட்டது போல் உணர்ந்தேன். காலை பத்துமணி இருக்கும் எங்களுக்கான ஹோட்டலில் வந்து இறங்கினோம் வெள்ளத்தின் பாதிப்புகள் ஏதுமற்று பாதுகாப்பாக இருந்தது லேசாக மழை தூரிக்கொண்டிருந்தது. எனக்கென ஒதுக்கப்பட்ட தனி அறையில் இரவு பயணக் களைப்பு நீங்க சற்று சாய்ந்து உறங்கிப்போனேன்.

எனது அலுவலக வேலைக்காக அவசரமாக அழைக்கப் பட்டிருந்தேன்.இங்கு என்ன வேலை என கொஞ்சம் யூகிக்க முடிந்தது. வெள்ளத்தால் சென்னையே தழைகீழாக மாறி இருந்தது இங்கிருக்கும் ஒருசில பெரிய தொழில்சாலைகளும், சில அரசு நிறுவனங்களும் தங்களுடைய கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையங்களை அமைத்துக்கொள்ளவும் குடிநீர் தேவைக்காகவும் எங்கள் நிறுவனத்தினை நாடியிருந்தனர். தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் அனைத்தும் சர்வநாசமாகிப் போயிருக்கும். பழுதுகளை சரிசெய்து மீண்டும் கட்டமைக்கும் பணிக்காக எங்களை அவசர கதியில் வரவழைத்திருப்பதாக யூகிக்கிறேன். எங்களது ஒட்டுமொத்த குழுவும் சென்னையை நோக்கி விரைந்திருந்தது. நல்ல இலாபத்தை கொடுக்கும் வேலை குறைந்தது ஒரு வருடத்திற்கு ஆர்டர் பற்றிய கவலையில்லை, அடிக்கடி ஊருக்கு சென்றுவரலாம் என மனதிற்குள் கார்பரேட் கால்குலேட்டர் ஓடிக் கொண்டிருந்தது.

அறையில் வெட்டியாக பொழுது கழிந்தது கொண்டிருந்தது சார் வாங்க ஒரு பீர் சாப்பிட்டுவிட்டு வரலாம் என சக ஊழியர்கள் அழைத்தனர் மறுத்து அரைக்குள்ளே தங்கிவிட்டேன். எல்லா தொலைக்காட்சியிலும் வெள்ளத்தைப் பற்றி செய்திகளை தந்து கொண்டிருந்தனர் குறிப்பாக அரசியல் சாக்கடை வீசும் சில சேனல்களில் வாடை கொஞ்சம் அதிகமாக வந்தது. உண்மை செய்தியை புறக்கணித்து விட்டு பழைய காட்சிகளை மீண்டும் மீண்டும் காண்பித்து இந்த வெள்ளத்திலும் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். மைக்கை நீட்டியவுடன் சிலர் எங்களுக்கு அது செய்யவில்லை, இது செய்யவில்லை, அவர்கள் வரவில்லை, இவர்கள் வவில்லை என புலம்பிக் கொண்டிருந்தனர் அடுத்த சேனலில் அவர்கள் இப்போதுதான் வந்தார்கள், எங்களை பாதுகாக்கிறார்கள், பாயசம் கொடுத்தார்கள், என பாராட்டிக் கொண்டிருந்தினர். இதுபோல இக்கட்டான நேரங்களில் அத்தகைய சாக்கடை சேனல்களை தவிர்பது உத்தமம் என நினைக்கிறேன். ஒருசில சேனல்கள் வெள்ளத்தில் கடைபிடிக்க வேண்டியவைகளை ஸ்லைடுஷோ மூலம் காட்டிக் கொண்டிருந்தனர் சில லோக்கல் சேனல்களும் தங்குமிடம் சாப்பாடு போன்றவை கிடைக்கும் தகவலை உடனுக்குடன் தந்து கொண்டிருந்தன. இத்தகைய சேனல்களை பாராட்ட தகும். வழக்கம்போல் சில சேனல்களில்  சீரியல்கள், சூப்பர் சிங்கர், மொக்கை ஜோக், மொக்கை பாடல்கள், ஓடிக் கொண்டிருந்தது. பொதிகை சேனல் கிடைக்குமா என ரிமோட் முழுவதும் தேடினேன்.ஒரு கடைசியில் சற்று தெளிவற்று தெரிந்தது.பேரிடர் சமயங்களில் தற்காத்துக் கொள்வதைப் பற்றி பேராசிரியர் ஒருவர் அதில் பேசிக் கொண்டிருந்தார்.

பேஸ்புக்கில் சென்னையில் வசிப்போருக்கு என புதிதாக ஒரு பகுதியை ஆரம்பித்திருந்தது I am safe. நீங்கள் இந்த பகுதியில் கிளிக்கினால் போதும் நீங்கள் இருக்கும் இடத்தின் மேப் வரைபடத்துடன் I am Safe என Status வரும். உங்களுடன் தொடர்ப்பில் இருப்பவர்கள் நீங்கள் பத்திரமாக இருக்கிரீர்கள் என உணர்ந்து கொள்வார்கள். அடடா நன்றாக இருக்கிறதே எனத் தோன்றியது. நண்பர்கள் சிலபேரது Status வந்தது அதை பார்த்து கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. சில நண்பர்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லை அதை நினைத்து சற்று கவலையாகவும் இருந்தது. நாமும் இப்போது சென்னையில்தானே இருக்கிறோம் I am safe என்ற பகுதியை கிளிக்கலாம் என நினைத்தேன். யாருமற்ற தனி அறையில் இந்த மழைக்காலத்திலும் A.C -ஐ ஆன் செய்து தலைக்கு ஒன்னு, காலுக்கு இரண்டு என தலையானையை வைத்துக்கொண்டு, சிகரெட் புகைத்தபடியே வெள்ளம் போவதை மூணாவது மாடியில் உட்கார்ந்து டிவியில் பார்துக்கொண்டிருக்கும் எனக்கு அவ்வாறு செய்வதற்கு சற்று மனசாட்சி உறுத்தியது.

Facebook பக்கங்கள் முழுவதும் வெள்ள நிவாரண உதவிகளைப் பற்றி States வந்து கொண்டிருந்தது. Social Network -களை அழகாக பயண்படுத்துவதை நினைத்து பெருமையாகஇருந்தது . சங்கர் அண்ணாவிடம் இருந்து அப்படி ஒரு ஒரு States வந்தது. சங்கர் அண்ணா கோவையை சேர்ந்தவர் விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிறார். தனக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களில் பொதுசேவைகளை சத்தமின்றி செய்துவருபவர். இரண்டு வருடங்களுக்கு முன் நீர் மேலாண்மை பற்றிய கருத்தரங்கில் அவரை சந்தித்தேன் பிறகு நல்ல நண்பர்களானோம். கண்டிப்பாக அவர் இங்கு இருக்கக்கூடும் என நினைத்தேன்,அவருக்கு போன் செய்தேன்..

- தொடரும்.