சாகச நடை.




அலுவலகம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தேன் எதார்த்தமாக கண்ணில் பட்டது அந்த போஸ்டர். உயரமான கட்டிடங்களுக்கு நடுவே ஒரு கயிறு இரண்டு கால்கள் என The Walk படத்தின் போஸ்டர் அது. இரவுக்காட்சி சினிமா என்றால் பிரியம் மொத்தம் இருபத்தைந்து பேர் மட்டுமே இருந்திருப்பார்கள் தியோட்டரில் நுழைந்தேன். தனியாக சினிமா பார்பது கொடுமை, தூக்கம் பிடிக்காமல் சென்றிருந்தேன். முதலில் மெல்ல பயணித்தது தூங்கி விடுவேனோ என நினைத்து சாய்ந்து கொண்டேன். சிறிது நேரத்திற்குப் பின் தூக்கம் கலைந்து ஆர்வம் அடைந்தேன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தேன் படத்தின் காட்சிகள் வேகமெடுக்க இருக்கையின் நுனிக்கே கொண்டு சென்றது திரைக்கதை. மயிர்கூச்செரியும் காட்சிகள் என்று சொல்வார்கள் அது போலத்தான் இருந்தது. 23 ஆம் புலிகேசி ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் கிளைமேக்ஸ் காட்சியில் கபாலத்தில் இருக்கும் முடிகளெல்லாம் கம்பி போல் நீட்டிக் கொண்டுவிட்டது. அப்படி என்ன இருக்கிறது இந்த படத்தில் ? அதற்கு முன் Philippe Petits என்பவரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Philippe Petits பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு சாகசக் கலைஞர். உயரமான இடங்களைப் பார்த்தாலே அதில் கயிறு கட்டி நடக்க வேண்டும் என்று துடிப்பவர். 1974-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 6-ஆம் தேதி அவர் நிகழ்த்திய சாகசம் அவரை உலகுக்கு அடையாளம் காட்டியது. உலகப் புகழ்பெற்ற (2001-ல் தீவிரவாத தாக்குதலில் தரைமட்டமான) ட்வின் டவர் கட்டிடங்களுக்கு நடுவில், 1,350 அடி உயரத்தில் கயிறு கட்டி நடந்தது தான் அந்த சாகசம். அன்று ஒரு முறை அல்ல, 8 முறை, மொத்தம் 45 நிமிடங்களுக்கு அந்த கயிற்றில் நின்று, நடந்து, உட்கார்ந்து, நடனமாடி, மண்டியிட்டு பார்வையாளர்களை வணங்கி என அனைத்து விதமான நம்ப முடியாத சாகசங்களையும் அவர் நிகழ்த்திக் காட்டினார். பிலிப்பின் இந்த சாகசத்தை விவரிக்கும் திரைப்படம் 'தி வாக்' (The Walk). 

அனைவருக்கும் தெரிந்த கதையை படமாக இயக்குவது சவாலான வேலை. நாவல் ஒன்றைத் திரைப்படமாக உருவாக்கும்போது, அதில் வேண்டிய மாற்றங்களை செய்யலாம். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இயக்கும் படத்தில் அப்படியான சுதந்திரமும் கிடையாது. உள்ளதை உள்ளபடியே சொல்ல வேண்டும்.

உயரமான இடங்களைத் தேடி, அதில் கயிறு கட்டி நடக்கும் பிலீப். 70-களில் புதிதாக திறக்கப்பட்ட ட்வின் டவரைப் பற்றி பத்திரிகையின் மூலம் தெரிந்து கொள்கிறார். அந்த இரு கட்டிடங்களுக்கு நடுவில் கயிறு கட்டி நடக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். 1,350 அடி உயரமுள்ள அந்தக் கட்டிடங்களுக்கு நடுவில், 140 அடி தூரத்தை பிலிப் கடக்க வேண்டும். தனது நண்பர்களின் துணையோடு நியூயார்க் சென்று, அங்கு சில நண்பர்களை திரட்டி, பல சிக்கல்களைத் தாண்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி, எப்படி நினைத்ததை நடத்தி முடிக்கிறார் என்பதே 'தி வாக்' படத்தின் கதை.

கேட்கும்போதே அசாத்தியமாகத் தோன்றும் இந்த சாகசத்தை, சொன்ன விதத்திலும் பிரம்மிப்பூட்டுகிறார், ஏற்கெனவே நம்மை 'ஃபாரஸ்ட் கம்ப்', 'பேக் டு தி ஃபியூச்சர்', 'கேஸ்ட் அவே' போன்ற படங்கள் மூலம் ஆச்சரியப்படுத்திய இயக்குநர் ராபர்ட் ஸெமிகிஸ். வித்தியாசமான காட்சியமைப்புகளுக்குப் புகழ்பெற்ற ஸெமிகிஸ், 'தி வாக்' படத்திலும் தனது பாணியைத் தொடர்ந்துள்ளார். ஏற்கனவே பிலிப் பெடீ பற்றி 'மேன் ஆன் வயர்' (Man on Wire) என்ற ஆவணப் படம் வெளியாகி ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளது. அதனால் திரைப்படமாக எடுக்கும்போது, பிலிப்பின் ட்வின் டவர் சாகசத்தில் அதிக கவனம் செலுத்தி படமாக்கியுள்ளார் இயக்குநர் ஸெமிகிஸ்.

சிறுவன் பிலிப், சர்க்கஸில் சாகசக் கலைஞர்கள் கயிற்றில் நடப்பதை பார்த்துவிட்டு தன் வீட்டுக்கு வந்து, ஒரு கயிறை இரு மரங்களுக்கிடையே நான்காக மடித்துக் கட்டி அதில் பயிற்சி செய்கிறான். அந்தக் கயிற்றில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க, ஒவ்வொரு கயிறாக கீழே விழுந்து, கடைசியில் ஒற்றைக் கயிறில் இளைஞன் பிலிப் நடந்து பார்க்கிறான். மற்றொரு காட்சியில், ட்வின் டவரில் கயிற்றைக் கட்டி நடக்க தயாராகும்போது, சுற்றியிருப்பவர்கள் அனைவரும் பிலிப் பார்வையிலிருந்து மறைகின்றனர். தனக்குக் கீழே இருக்கும் ஆழம், எதிரே இருக்கும் கட்டிடம் என அனைத்தும் மேகங்களில் மறைந்து வெறும் கயிறு மட்டும் பிலிப்பின் கண்களுக்குத் தெரிகிறது. முதல் அடி எடுத்து வைத்தவுடன் மேகங்கள் விலகி, மீண்டும் அனைத்தும் அவரது பார்வைக்கு வருகிறது. படம் முழுவதும் இப்படியான காட்சிகளால் முத்திரை பதிக்கிறார் இயக்குநர்.

படத்தின் பிளஸ் தொழில்நுட்பம்தான் . அசத்தலான ஒளிப்பதிவு 70 களின் நியூயார்க்கை கண்முன் கொண்டு வந்திருக்கின்றனர். படம் 3D எபெக்ட்டில். வழக்கமாக 3டி யுக்தியை தேவையில்லாமல் பயன்படுத்தும் ஹாலிவுட் படங்களுக்கு மத்தியில், 'தி வாக்' தனித்து நிற்கிறது.
தேவையில்லாமல் பொருட்கள், ஆயுதங்கள், மனிதர்கள் பறந்து நம் கண்ணைக் குத்தும்படியான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. காட்சிகளின் ஆழத்தை பார்வையாளர்கள் உணரும் பொருட்டே 3டி பயன்படுத்தப்பட்டுள்ளது. பிலிப், ட்வின் டவரின் மாடிக்கு சென்று எட்டிப்பார்ப்பதிலிருந்தே நம் வயிற்றில் ஏதோ சங்கடம் ஏற்படுவதை உணரலாம். அந்த உயரத்தில் நாமும் பிலிப்போடு நின்று பார்ப்பது போலவே இருக்கிறது. தொடர்ந்து, கயிற்றில் நடக்கும் அவரது சாகசத்தின் போது நமது கால்களும் கிட்டத்தட்ட நடுங்கிக் கொண்டே இருக்கின்றன.

படத்தில் சின்ன சின்ன கேரக்டர்கள் ரசிக்க வைக்கின்றனர். பிலிப்பின் தோழி மற்றும் அவரது நண்பன் கலகப்பூட்டுகின்றனர். சட்டவிரோதமாக ட்வின் டவரில் நுழைந்து, மொட்டை மாடிக்குச் சென்று, நடப்பதற்கு கயிறை இழுத்துக் கட்டி ஆயத்தமாகி, நடக்கும்போதுதான் நடுவில் செல்லும் கயிறு தலைகீழாக கட்டியிருப்பது பிலிப்புக்குத் தெரிகிறது. இதற்குப் பின் என்ன நடந்தது?. ஒரு Walk போய்ட்டு வாங்க..

ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் நம்மை பிரதிபலிக்க வேண்டும்,காட்சியோடு ஒன்றிப்போகச் செய்யவேண்டும். காதல், காமம், பயம், அழுகை, திரில் எல்லாமே திரைக்கு முன் நாம் அனுபவிக்க வேண்டும். அப்படியொரு திரில் அனுபவத்தை தந்தது இந்த திரைப்படம். தயவு செய்து DVD மற்றும் மொபைல் போன்களில் பார்க்காதீர்கள். நல்ல தியோட்டருக்கு சென்று பாருங்கள் அப்போதுதான் படத்தின் தன்மையை உணர முடியும். பின் குறிப்பு உங்களுக்கு உயரம் என்றால் பயமா? அப்படியென்றால் யாரையாவது துணைக்கு கூட்டிக்கொண்டு செல்லுங்கள். மயக்கம் போட்டு விழுந்துவிடக் கூடும்.

Man On Wire Documentary.
https://youtu.be/3ZwuSoR1WkI

Trailer.