அதிகாலையின் அமைதியில்.



1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்த காலம் ரஷ்யாவில் ஜெர்மானியர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிழக்கே மூர்மன்ஸும் மேற்கே லெலின் கிராத்தும் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் 171 இருப்புப்பாதை கிளைநிலையத்தில் உள்ள பண்டகசாலையை பாதுகாக்கும் பொருப்பு கமாண்டர் சார்ஜண்டு மேஜர் வாஸ்கோவிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஏற்கனவே சிதைந்து போன இந்த இடத்தில் போர் சூழல்கள் பெரிதும் இல்லாததால் பாதுகாப்புப் பணியைமட்டுமே வீரர்கள் செய்து வருகின்றனர்.வேலையற்ற சூழ்நிலையில் வீரர்கள் செயலின்றி குடிப்பதும் கும்மாளமிடுவதும் நடந்து கொண்டேயிருக்கிறது. மிகவும் கடுகடுப்பான மேஜர் பொருத்துக்கொள்ள முடியாமல் மேலிடத்திற்கு தகவல் அனுப்புகிறான். தயவு செய்து குடிப்பழக்கம், பெண் போதை இல்லாதவர்களை அனுப்பவும்.இந்த பழக்கங்கள் இல்லாதவர்கள் என்றால் அலிகளைத்தான் அனுப்பவேண்டுமென பதில் வருகிறது. வாஸ்கோவ் திரும்பத்திரும்ப நச்சரிப்பதால் மேலிடம் இருபது புதியவர்களை அனுப்புகிறது. அவர்களை கண்டதும் மேஜர் அதிர்ச்சியடைகிறான். அனைவரும் பெண்கள். முடிந்தால் சமாளித்துக்கொள்.

மேஜருக்கு பெரும் சோதனை தினமும் ஒவ்வெருவரையும் சமாளிப்பது போதும் போதும் என்றாகிவிடுகிறது. ஒருநாள் படைப்பிரிவிலிருந்து திருட்டுத்தனமாக இரவில் வெளியே செல்லும் ரீதா என்பவள் திரும்பும் வழியில் இரண்டு ஜெர்மானியர்களை பார்த்ததாக கூறுகிறாள். அவர்கள் இங்கு ஏன் வந்தார்கள் எதற்கு என யோசிக்கும் மேஜர் அவசர கூட்டத்தை கூட்டுகிறான் அவர்களைத் தேடி கண்டுபிடிக்க தன்னோடு ஐந்து பெண்களை தெரிவு செய்கிறான்.

அவர்கள் உளவு பார்க்கத்தான் வந்திருப்பார்கள் நாம் தடுத்து நிருத்த வேண்டுமென கட்டளையிடுகிறான். ஐந்து பெண்கள் படைக்கு அஸ்யானி தலைமைதத் தாங்குககிறாள் கூட வருபவர்கள் ழேனியா, ஸீஸா, காலியா மற்றும் சோனியா. இவர்களைக் கூட்டிக்கொண்டு மற்றும் 1930 ஆண்டு துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு தானியங்கி துப்பாக்கி வைத்திருக்கும் ஜெர்மானியர்களைத் தேடிப் போகிறான். அவர்களை எப்படியும் வேப் ஏரியைக் கடந்து காடுகளை தாண்டி நகரத்தை அடைவதற்குள் தடுத்து நிருத்த வேண்டுமென மிகவும் சிக்கலான பாதையை தேர்ந்தெடுக்கிறான். போர்பயிற்சி அவ்வளவாக தெரியாத பெண்களை வைத்துக்கொண்டு தினறுகிறான்.

நேரம் தொலைந்து கொண்டிருக்க குன்றின் மீது சற்று ஓய்வெடுக்கின்றனர் தற்செயலாக நோட்டமிடும்  சோனியா பிதற்றுகிறாள். மேஜர் இரண்டு ஜெர்மானியர்கள் மட்டுமல்ல. மொத்தம் பதினாறு. கையில் அதிநவீன துப்பாக்கிகளும் வெடி பொருட்களும் வைத்திருக்கின்றனர் என்கிறாள். காட்டுப்பகுதியை நன்கறிந்த அவன் இங்கு எதற்காக வந்திருப்பார்கள் என யூகிக்கிறான். லெலின் கிரேடை தாண்டிய இருப்புப்பாதை தகர்த்துவிட்டால் ரரஷ்யாவின் ஆயுத போக்குவரத்தை நிறுத்தலாமென்பது ஜெர்மனியின் திட்டம் அதற்காகவே இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் அனுப்பப்பட்டுள்ளனர்.
பழைய துப்பாக்கியையும் ஐந்து பெண்களையும் வைத்துக்கொண்டு இந்த காட்டில் மேஜர் வாஸ்கோவ் அவர்களை எப்படி தடுத்தான்  ஜெர்மனியின் திட்டத்தை முறியடித்தான் என்பதே நாவலின் மீதிக்கதை.

எங்கோ கேட்டது போல் இருக்கிறதா? ஆம்! "பேராண்மை " படத்தின் மூலம்தான் இந்த ரஷ்ய மொழி புத்தகம். உண்மைக்கதையை வைத்துக்கொண்டு "பரீஸ் வஸிலியெவ்" எழுதிய நாவல். ரஷ்யாவில் இன்றும் போற்றப்படுகிறது. இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய புத்தமாக திகழ்கிறது. இதை தமிழில் அழகாக மொழிபெயர்த்துள்ளார் பூ. சோமசுந்தரம்.

விருவிரு என பயணிக்கும் தேடலில் நடுவே ஒவ்வொருவரின் தனிக்கதையையும் சுருக்கமாக கொடுத்திருப்பது தனிச்சிறப்பு.
1972 ஆம்ஆண்டு திரைப்படமாகவும் வெளிவந்து ஆஸ்கார்வரை பரிந்துரைக்கப்பட்டது.  புத்தகம் படித்தவுடன் இனையத்தில் திரைப்படத்தையும் பார்த்து ரசித்தேன்.புத்தக விமரிசனத்தோடு சினிமாவையும் அறிமுகப் படுத்தியுள்ளேன். தவறாமல் வாசித்துவிட்டு பாருங்கள். சோவியத்தின் பிரபல இயக்குனர் Stanislav Rostosky இயக்கியிருந்தார்.

The Dawns Here are quiet.
Boris Vasilyev
அதிகாலையின் அமைதியில்.
பூ. சோமசுந்தரம்.

Boris Vasilyev(1924-2013).

சோவியத்யூனியனின் தலைசிறந்த எழுத்தாளர். இவரது படைப்புகள் பெரும்பாலும் இராணுவம் மற்றும் போர் சூழல்களில் எழுதப்பட்டிருக்கும். புதிய தலைமுறைக்கு தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய எழுத்துக்கள் அவருக்கு சொந்தம். இவரின் பெரும்பாலான படைப்புகள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு மேலும் புகழை பெற்றுத்தந்துள்ளது.Tomorrow there come war. Don't shoot the white swans இவரது புகழ் பெற்ற நாவல்கள்.

Trailer.