அந்த பட்டு வேஷ்டிக்காரர்.

திகாலை இரண்டுமணி முதல் நான்கு மணிவரை இரயில்வே ஸ்டேஷனில் கொஞ்சம் அமைதி நிலவும். எங்களது அரட்டையின் உச்சகட்டம் அப்போதுதான் தொடங்கும். மணி கூட கண்ணசந்து பப்பியையோ ஜூலியையோ நினைத்து கனவு கண்டுகொண்டிருக்கும் தருணம் அது வழக்கம் போல் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஏதேச்சயாக கண்ணில் பட்டது அந்த உருவம். சுமார் ஐம்பது வயதிருக்கும் மிடுக்காக பட்டு வேஷ்டி சட்டையில் பார்ப்பதற்கு பணக்காரர் போல் தோன்றிய அவர்  தண்டவாளங்களை வெறித்தபடியே அமர்ந்திருந்தார். நாங்கள் உலக பொருளாதாரத்தைப் பற்றியும் நதிநீர் பங்கீடு பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம் (வெட்டி பேச்சிற்கு வேறென்ன வேண்டும்) ஆனாலும் எனது பார்வை அவரை கவணித்தபடியே இருந்தது.




யாரோ? ஒருவர்.. ஏதோ? பிரச்சனை போல ... ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே இருக்கிறார்... வாங்க போய் விசாரிக்கலாம் என்று ராமகிருஷ்ணன் சாரிடம் கூறினேன். நமக்கு ஏன்டா வம்பு? பேசாதிரு என்றார் அவர். சார், நியாபகம் இருக்கா? இதே போல் ஒருநாள் ஒரு பையன் இதே ஸ்டேஷனில் இப்படித்தான் உட்கார்ந்திருந்தான் அப்போது அவன் மீது அன்பாக ஒரு கை விழுந்தது அதற்குப்பின் இருவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் நண்பர்களாகினர் தற்போதுகூட அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றேன். ஆம் நானும் அறுபது வயதை தாண்டிய ராமகிருஷ்ணன் சாரும் இப்படித்தான் நண்பர்களானோம்.
சரி வா போகலாம் என்று இருவரும் அந்த பட்டு வேஷ்டிக்காரரின் அருகில் சென்று அமர்ந்தோம்.



நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச்சை தொடங்கினேன். உங்களை நீண்ட நேரமாக இங்கு பார்க்கிறேன் போகவேண்டிய இரயிலை தவறவிட்டு விட்டீர்களா? என்றேன் இல்லை என்று அவர் தலையசைத்தார். கோபால் அண்ணனும் ஆனந்தும் எங்களோடு சேர்ந்து கொண்டனர். நன் மீண்டும் ஏதாவது பிரச்சனையா? என்றேன். இப்படி ஆளுக்கொரு கேள்விகளாய் அடுக்கிக் கொண்டே செல்ல சிறிது நேர அமைதிக்குப் பின் அந்த பட்டு வேஷ்டிக்காரர் பேசத் தொடங்கினார். நீங்கள் நினைப்பதுபோல் எதுவுமில்லை, இன்று என் வாழ்நாளின் மகிழ்ச்சியான தருணம், ஒரு தகப்பனாக பூரித்துப் போகும் நிகழ்வு, ஆம்! இன்று காலையில்தான் என் மகளுக்கு திருமணமானது என்றார்.

திருமணத்தில் ஏதாவது பிரச்சனையா? என்று நாங்கள் ஒருசேர கேட்க அவர் மேலும் தொடர்ந்தார் .

அதெல்லாம் ஒன்றுமில்லை, இருவீட்டார் சம்மதப்படி நன்றாகவே நடந்து முடிந்தது என்றார். பெண்பிள்ளைகளை பெற்ற தகப்பன் தன் வாழ்நாளில் பெறும் உச்சகட்ட சந்தோசம் எது தெரியுமா? அவர்களின் திருமணம் தான் மேலும் அந்த தகப்பன் அனுபவிக்கும் உச்சகட்ட பிரிவு எது தெரியுமா? அதுவும் அவர்களின் திருமணம்தான் அந்த இரண்டு தருணங்களும் இன்று எனக்கு வாய்க்கப்பட்டது என்றார். என் மகள் பிறந்த பிறகுதான் நாங்கள் எல்லா செல்வங்களையும் பெற்றோம் சாதாரண கூலியாக இருந்த நான் இன்று பெரிய நிருவனத்தின் முதலாளி இன்று என்னிடம் இருக்கும் பெயர், புகழ், செல்வம் எல்லாம் என் மகளின் சிரிப்பிலிருந்து நான் பெற்றது, இதுவரை நான் சேமித்ததை மொத்தமாக தூக்கிக் கொடுத்துவிட்டது போல் உணர்கிறேன் என்றார். மேலும் இருபத்தைந்து  வருடங்களுக்கு முன்பு யாருமற்றவர்களாய் இதே! திருப்பூர் ஸ்டேசனில் நின்றது நினைவுக்கு வருகிறது. நானும் என் மனைவியும் பெற்றோரை எதிர்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டோம், மனைவியின் குடும்பத்தில் அவளின் பிரிவை எப்படி தாங்கிக் கொண்டிருந்திருப்பார்கள்? இன்று நான்படும் வேதனையை அவளின் தந்தையும் பெற்றிருப்பார் அல்லவா? அதை நினைத்துதான் வேதனைப்படுகிறேன் என்றார். நான் நல்ல தகப்பனாக ஊரறிய திருமணம் செய்து வைத்தேன் ஆனால் அவரோ! என்னால் எவ்வளவு? அவமாணப் பட்டிருப்பார் அவர் சாகும்வரை எங்களை சேர்த்துக் கொள்ளவே இல்லை, இன்றுதான் ஒரு தகப்பனாக அந்த வலி உணர்ந்தேன் எப்போதோ நான் செய்த பாவத்தை நினைத்து இன்று கலங்குகிறேன் அதுதான் தூக்கம் பிடிக்கவில்லை மனைவிக்கு தெரியாமல் இங்கு வந்து அமர்ந்தேன் தொடங்கிய இடத்தில் பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தேன் என்றார்.

பெண்பிள்ளையைப் பெற்ற ஒவ்வொரு தகப்பனின் வலி இது நிஜம்தான். என்னடி! பொம்பள புள்ளையா? என பெண்களே! முகம் சுழித்தாலும் பெண் பிறந்தால் முதலில் சந்தோசப்படுபவன் ஆண்தான். ஏனென்றால் எல்லா ஆண்களுக்கும் தெரியும் "அனைத்தையும் அவனையும் ஆள்பவள் பெண்" என்று. பெண்குழந்தை பெற்ற நண்பர்கள், மற்றும் உறவினர்களை பார்த்திருக்கிறேன் பிள்ளை பிறந்த பிறகு அவர்களின் நடவடிக்கைகளை கவணித்திருக்கிறேன் ஒரு ஆண் அந்த பெண் குழந்தைக்காக தன்னை முற்றிலும் மாற்றிக் கொள்கிறான். அய்யோ! பெண்குழந்தை நாளைக்கு கட்டிக் கொடுக்கனும், நகைநட்டு சேர்க்கனும் எனும் பொருளாதார பிரச்சனை ஒருபக்கம் இருந்தாலும் அவனது வாழ்வு அந்த பெண்குழந்தையைச் சுற்றியே சுழல்கிறது. காதல், கலப்புத் திருமணம் இவற்றை எதிர்க்கும் தகப்பனின் காரணங்களாக ஜாதி, மதம் என சொல்லப்பட்டாலும், அதற்குப்பின் மறைந்திருப்பது தந்தை- மகள் என்னும் கண்ணுக்குத் தெரியாத பாசமே. இன்று நிலவும் கேடுகெட்ட சமுதாய கலாச்சாரங்களுக்கிடையே ஒரு பெண்குழந்தையை கழுகிடம் இருந்து ஒரு கோழிபோல் பாதுகாத்து ஒருவனிடத்தில் ஒப்படைக்கின்றான் எல்லாம் நன்றாக முடிந்த பிறகு பிரசவ வலிபோல் உணர்கிறான். அம்மா- மகன் எனும் உறவு வெளிப்படையானது, அது இயற்கையானது அதை விட அப்பா- மகள் உறவு சிறந்தது எனக் கருதுகிறேன், எனென்றால் வெளிக்கொணராத பாசம் அது.

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, குடும்பம் குட்டி, என்று மற்ற நாடுகளை ஒப்பிடும் போது நமது நாட்டில்தான் இந்த சிக்கலான பிரச்சனை ஏன்? என்று ராமகிருஷ்ணன் சாரை கேட்டேன்.
எப்படியும் வாழலாம் என்பது மிருக குணம், இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித பகுத்தறிவு. நீ மறுபடியும் வந்த இடத்திற்கே போகலாம் என்று நினைக்கிறாயா?  என்று திருப்பிக் கேட்டார்.

ஒரு இடத்தில் வளர்ந்த செடியை பிடுங்கி வழுக்கட்டாயமாக வேறிடத்தில் நடும் உறவு தேவையா? குடுப்பம், பாசம், அன்பு எல்லாம் இருந்தும் இன்றைக்கும் திருமண உறவுகளில் பிரச்சனைகள் இருக்கிறதே! இதோ! இந்த தகப்பனின் கவலைக்கு என்ன ஆறுதல் தரப்போகிறீர்கள் என்று கேட்டேன்.
"உறவுகள் என்பது ஒன்றை இழந்து ஒன்றை பெறுவதுதான்".
புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் அங்கிருப்பதுவும் தன் தாய், தந்தைதான் என நினைத்துக் கொண்டாலே போதும். அதுபோல் தன் வீட்டிற்கு வரும் மருமகளும் தன் மகள்தான் என புகுந்த வீட்டில் உள்ளவர்களும் உணர்ந்து கொண்டாலே போதும் திருமண உறவுகளில் விரிசலே வராது இந்த இரண்டு புரிதலும் முரண்படும் நேரத்தில்தான் உறவுகள் சிக்கலாகிறது என்றார். உண்மைதான் அதனால்தான் மரு+ மகள், மரு+மகன் என்கிறோம்.

வாழ்கையில் சிலரது சந்திப்புகள் சுவாரசியமானது அப்படி சந்திக்கும் மனிதர்கள் நல்ல ஆசானாகி விடுகின்றனர். அந்த பட்டு வேஷ்டிக்காரர் அப்பா- மகள் எனும் உறவை பெண்களோடு பிறக்காத எனக்கு அழகாக புரிய வைத்தார். மேலும் திருமண உறவைப் பற்றிய புரிதலும் கிடைத்தது. இது நடந்து ஒன்னரை ஆண்டுகள் கழிந்திருக்கும் அந்த பட்டு வேஷ்டிக்காரர் தனது மகளின் பெயரில் திருப்பூரில் பெரிய கார்மென்ட்ஸ் நடத்தி வருகிறார். அதற்குபின் இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறோம் அடிக்கடி போனில் பேசுவோம். ஒருநாள் அவரிடமிருந்து அழைப்பு வந்தது நலம் நலமறிய ஆவல் விசாரித்துக் கொண்டோம். தன்மகளுக்கு பெண்குழந்தை பிறந்திருப்பதாகவும் அமேரிக்காவில் வசிப்பதாகவும் கூறினார். பையனுக்கு வரண் பார்ப்பதாக சொன்னீர்களே என்னவாயிற்று? என்றேன். "நல்ல மகளாய் தேடிக் கொண்டிருக்கிறேன்"  தேவ் என்றார். அவர் சொன்ன "நல்ல மகள்" என்ற வார்த்தைதான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. இராமகிருஷ்ணன் சார் கூறிய வார்த்தையை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்.

"ஒன்றை இழந்து ஒன்றை பெறுவதுதான் உறவுகள்".