யுத்தகளம் 2


அதிகாலை கண்டியை வந்தடைந்தோம். கண்டியிலிருந்து பேருந்தில் வவுனியா சொல்வதாக ஏற்பாடு.ஸ்டிபனிடம் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு போகலாம் என்றேன். பயணிகள் தங்கும் விடுதிக்கு சென்று தயாரானோம்.காபி குடிக்கவேண்டும்போல் இருந்தது. சுமாரான ஹோட்டலுக்கு கூட்டிக்கொண்டு போனார், ஒரு சிகரெட் வாங்கி பற்றவைத்தேன். நம்மஊரு சிகரெட் தாராளமாக கிடக்கிறது. சார் சிகரெட் Extraவாங்கி வச்சிகோங்க அங்க கிடைக்காது என்றார் ஸ்டீபன்.
பேருந்தில் சன்னலோரம் அமர்ந்து கொண்டேன் பொழுது லேசாக விடிந்துகொண்டிருந்தது.கண்டியைத்தாண்டி வடக்கே முன்னேறினால் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள்தான். விவசாயமே பிரதான தொழில்.
வழியெங்கும் நம்மஊரைப்போல வயல்வெளிகள் தென்படுகிறது. தென்னை,வாழை மரங்களை காணமுடிகிறது.
ஸ்டிபன் தூங்கிக்கொண்டிருந்தார் ஓரிடத்தில் பேருந்து நின்றது இராணுவ சோதனை. பேருந்திலிருந்து இறங்க முற்பட்டேன். ஸ்டீபன் தடுத்தார் உட்காருங்க சார் என்றார். இரண்டு மூண்று இராணுவ வீரர்கள் பேருந்திற்குள் நுழைந்தனர். எல்லோரது உடமைகளும் சோதிக்கப்பட்டது. 
காலை பத்துமணி வவுனியாவை வந்தடைந்தோம். இது இலங்கையின் மருபக்கம் இதுவரை நான்பார்த்த இடங்களில் வேறுபட்டிருந்தது. விடுதலைப்புலிகளின் பிரதான ஊர் என்று சொல்லலாம். போர்பாதிப்பு தென்படுகிறது. துப்பாக்கியேந்திய இராணுவ வாகணங்கள் அலைந்துகொண்டேயிருந்தன. சற்று உள்ளுக்குள் பயமெடுத்தது. ஸ்டீபன் சாப்பிடப்போனார்.நான் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2.00 மணிவரை ஏதும்சாப்பிடுவதில்லை. இன்று ஒரு காபிமட்டடும் குடித்திருந்தேன். சிறிது நேத்திற்கு பின் ஸ்டீபனின் நண்பர் அருள்தாஸ் அங்கு வந்துசேர்ந்தார்.

தங்களுக்கென தனியே ஒரு ஜீப் தயார்செய்யப்பட்டிருந்தது. இரண்டுமூண்று சோதனைச்சாவடிகளைத்தாண்டி மாங்குளம் நோக்கி போய்கொண்டிருந்தோம். வழியெங்கும் போரில் சேதமடைந்த வீடுகளை காணமுடிகிறது. கொஞ்சம் விவசாயமும் நடக்கிறது. நம்ம ஊரைப்போலவே வெயில் அதிகம். சாலைகள் குண்டும் குழியுமாக வெறிச்சோடிக்கிடக்கின்றன. அகதிகள் முகாம் எங்கிருக்கிறது நாம் போகமுடியுமாயென? கேட்டேன். 
ஸ்டிபனும் அருளும் சட்டென திரும்பினர். சார் எங்கள மாட்டிவிடாம போகமாட்டீங்க போல! என்றார். சார் ஒன்னு ரெண்டு மூகாம் தவிர மற்றதெல்லாம் சொல்லக்கூடிய நிலையில் இல்லை. நீங்க டீவில பாக்குறது கேட்குறதெல்லாம் அரசியல் விளையாட்டு. இங்க வாழ்கை வேறமாதிரி. இப்போ எங்களுக்கு தேவை அமைதி அதுவும் யார் தலையீடும் இல்லாத அமைதி. இங்கிருக்கும் வளங்களைக்கொண்டு எங்களால மீண்டுவர முடியும் இருபது வருசம் பின்தங்கிவிடுவோம் பரவாயில்லை என்றார் அருள்தாஸ்.புளியங்குளம் நெருங்கிக்கொண்டிருந்தோம். 
சிறிது நேரத்தில் சோதனைச்சாவடி ஒன்று வந்தது அருள்தாஸ் ஜீப்பிலிருந்து இறங்கி உள்ளே சென்றார். இராணுவ வீரன்ஒருவன் எங்களைநோக்கி வந்து ஜீப்பை சோதனையிட்டான் ஸ்டீபன் கிழேயிறங்கி ஏதோ சிங்களத்தில் பேசினார். இரண்டுமூண்றுமுறை என்னை திரும்ப பார்த்த வீரன் தன்னுடைய துப்பாக்கியை என்முன் நீட்டினான். கொஞ்ச நேரத்தில் உடம்பு ஜில்லிட்டது. தாத்தா பாட்டியெல்லாம் கண்ணுக்குள் தெரிவது போல் மாயமாகயிருந்தது. (துப்பாக்கிகளை பார்த்திராத தலைமுறைகள் நாம்). துப்பாக்கியை நீட்டி Who is this எனகேட்டான். அப்போதுதான் குனிந்து என் டீசர்ட்டை பார்த்தேன்.

என் டிசர்ட்டில் பாப் மார்லேயின் படம்.விடுதலைக்காக பாடியவர். அவரது விடுதலை புரட்சி பாடல்கள் உலகப்புகழ்பெற்றது. வசமாக மாட்டிக்கொண்டோமென நினைத்தேன். இவர் ஹாலிவுட் பாப் சிங்கர் என சொல்லி சமாளித்தேன். சிறிது நேரத்தில் இரண்டு வீரர்கள் எங்களை உள்ளே அழைத்தனர். சோதனைச்சாவடியின் உள்ளே கர்னல் போல ஒருவர் அமர்ந்திருந்தார். எனக்கு உதறல் அதிகமானது. அருள்தாஸ் எங்களைப்பற்றி முன்பே பேசியிருந்தார்.எனது பாஸ்போட்டை காண்பிக்குமாறு கூறினார். நீ தமிழா? என கேட்டார். தலையசைத்தேன். பாஸ்போட்டின் பிரதி எடுத்துக்கொண்டார். இரண்டுயிடங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டார். எனக்கு ஆங்கிலம் மட்டும்தெரியுமென்றேன். ஒரு தனி அறைக்கு கூட்டிக்கொண்டு போனார்கள் ஆடை முழுவதும் களைந்து சோதனை செய்தனர்.அருள்தாஸ்தான் நிறைய பேசினார். சிறிது நேரத்தில் வேர்த்து விருவிருத்து அங்கிருந்து கிளம்பினோம். 
அருள்தாஸ் ரொம்பவும் பதட்டத்துடன் காணப்பட்டார் என்னாச்சு? என கேட்டேன். ஏன் சார் உங்களுக்கு இந்த வேலை? இங்க பலமுறை நான் போய்வந்திருக்கேன் ஆனா இன்னக்கி நீங்க வந்ததால இவ்வளவு பிராச்னை. அதுவும் நீங்க தமிழ்நாடு வேற. என்னுடைய.லைசென்ஸ் வாங்கி வச்சிகிட்டாங்க திரும்பிவரும்போது வாங்கிக்க சொல்லிட்டாங்க என்றார் அருள்தாஸ். அவரிடம் மன்னிப்பு கேட்டேன். சிங்களத்தில் ஏதோ முனகிக்கொண்டே வந்தார். ஸ்டீபன் தடுத்தார ஏதோ என்னைத் திட்டுகிறார் என நினைத்துக்கொண்டேன். இலங்கையில் சுற்றிப்பாற்க நிறைய இடங்கள் இருக்கு ஏன் சார் இங்க வர ஆசைப்படுறீங்க என்றார். "நீங்களெல்லாம் எங்க சொந்தமில்லையா? "என்றேன். சிறிதுநேரம் மௌனம். ஜீப் போய்க்கொண்டிருந்தது.

சொந்தமுன்னு சொல்லுறீங்க எங்களை கைவிட்டுடீங்களே? சார் என்றார். இல்ல அருள்தாஸ் ஒவ்வொரு தமிழனுக்கும் உணர்வுகள் இருக்கு எங்க முட்டாள்தனமான அரசியல் மற்றும் மீடியாக்கள்தான் எங்களை மறத்து போகவைத்திருக்கிறது என்றேன். 
ஆற்றுப்பாலம் அருகே வண்டியை நிறுத்தினார். தண்ணீர் தேக்கிவைத்திருக்கும் இடம்போல் காணப்பட்டது.ராக்கெட் தாக்குதலில் சேதமடைந்திருந்தது. சிகரெட்டை பற்ற வைத்தேன். அருள்தாஸ் ஆரம்பித்தார் இங்க விவசாயம் நல்லமுறையில் போய்க்கொண்டிருந்தது சிவில் யுத்தமும் இயற்கையும் எல்லாத்தையும் பாலாக்கிடுச்சி சார் என்றார். நீங்களாவது பரவாயில்லை நாங்கள் எங்களையே அழித்துக்கொண்டிருக்கிறோம் தெரியாமா? என்றேன். அங்கிருந்து கிளம்பினோம்.  மதியவேளை நெருங்கிக்கொண்டிருந்தது வெய்யில் சுட்டெரிக்கிறது. புளியங்குளத்தில் எங்களுக்காக உணவு தயாரித்திருப்பதாக அருள்தாஸ் கூறினார். மணி இரண்டு தாண்டட்டும் என்றேன் அதுவரை எங்காவது போகலாம் என்றேன். எப்படியாவது யுத்தம் நடந்த எல்லா இடத்திற்கும் போய்விடவோண்டுமென நினைத்தேன்.புளியங்குளம் தண்டி கிராமங்களை நோக்கி போய்க்கொண்டிருந்தோம். யுத்த தாக்குதலில் சிதைவடைந்த ஒரு ரயில்வே ஸ்டேஷனில் வண்டியை நிறுத்தினார். முழுமையாக ராக்கெட் தாக்குதலில் சேதமடைந்த இடத்தை அப்போதுதான் பார்த்தேன். ஸ்டேஷனை சுற்றி நிரைய வீடுகள் இருந்தன அனைத்தும் முற்றிலும் அழிந்து காணப்பட்டது. கீழ் இறங்கி வீடுகளுக்கிடையே நடந்தேன். ஒரு கிராமமே முற்றிலும் சிதைக்கப்பற்றிருந்தது. எத்தனை வீடுகள் தெரு நீண்டு கொண்டே போகிறது. ஒருசில நாய்களைத் தவிர யாதுமற்ற மயானம் போல் காணப்பட்டது. என்ன ஸ்டிபன் இது என்றேன். அருள்தாஸ் நக்கலாக சிரித்தார். பல வருசமா பாட்டன் உருவாக்குன ஊருசார் இது. ஒரு நிமிசத்துல அழிஞ்சிருக்கும் என்றார். இதுபோல பல ஊர்கள் இருக்கு இது வெரும் கிராமம்தான் என்றார். எனக்கு தலை சுற்றுவதுபோல் இருந்தது. ஒருநிமிடம் இந்த கிராமம் உயிர்ப்புடன் இருப்பாக கற்பனை செய்கிறேன். எத்தனை மனிதர்கள் இறந்திருப்பார்கள். 
சார் நாய்கள் கூட்டமாக நிர்க்கிறது எல்லாம் பினந்தின்னி நாய்கள் வாங்க திரும்பிடலாம் என்றார் அருள்தாஸ். இவ்வளவு பினங்களை தின்ற பின்னுமா பசி அடங்கவில்லை? என்றேன். ஒருமுறை பழகிவிட்டால் ருசிவிடாது என்றார். நாங்கள் என்ன பேசிக்கொள்கிறோம் அதன் உள்அர்த்தம் என்ன?  என புரியாது ஸ்டீபன் வேகமாக திரும்பிக்கொண்டிருந்தார்.   ஸ்டேஷனருகே வந்து அமர்ந்தேன்.