நள்ளிரவில் சுதந்திரம்


நள்ளிரவில் பெற்றோம் ,
இன்னமும் விடியவே இல்லை...

அழகிய புதுக்கவிதை. இந்தியாவிற்கு  சுதந்திரம் நள்ளிரவில் ஏன் வழங்கப்பட்டது, ஆகஸ்ட்-15 ஏன்? என்ற கேள்விக்கு சரியான விடையை இந்த நூலில் காணலாம்.

1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தப்பின் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்துக்களும் முஸ்லிம்களும் பட்ட துயரங்கள் இதில் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது.  முஸ்லீம்களுக்கு தனி நாடே என்று பிடிவாதமிருந்த ஜின்னா, இந்தியாவை கூறுபோடுவற்கு முன் என் உடலை கூறுபோடுங்கள் என்று முழங்கிய காந்திஜி,நோய்க்கு  தீர்வு காண்பதை விட்டுவிட்டு காந்தி காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருக்கிறார் என்ற மாற்று கருத்து கொண்ட நேரு.தொழில் புரட்சி மட்டுமே மறுமலர்ச்சி என்று  நம்பிய படேல், கஷ்மீர் தனி நாடு என அடம்பிடித்த ஹரிசிங்."விடுதலைக்கு மட்டுமே நாங்கள் ஒன்றுபடுவோம் சேர்ந்து வாழ அல்ல " என  நினைத்த இந்திய மக்கள்,, இவர்களுக்கிடையே இந்தியாவில் தங்களது சாம்ராஜியத்தை முடித்துக்கொள்ள அனுப்பப்படுகிறார் மவுண்ட் பாட்டன்.மிகவும் சிக்கலான ஒரு காலகட்டம். கடைசி வைசிராய் இந்தியாவில் என்ன செய்தார். பிரிவினையின் போது அவர் கையான்ட விதம் எப்படி என அழகாக விவரிக்கிறது இந்த வரலாற்று நூல்.

இந்த நாவலின் கதாநாயகன்  மவுண்ட் பாட்டன் என சொல்லலாம் அவரிடம் 30 மணிநேரம் பேட்டி கண்டும் மேலும் சில ஆங்கில அதிகாரிகளிடம் தகவல் பெற்றும், கள ஆய்வு மேற்கொண்டு டொமினிக் லேப்பியர் மற்றும் லேரி காலின்ஸ் ஆராய்ந்து எழுதிய இந்தியாவின் கவிதை. பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் இருதிகட்டத்தில் வளர்ந்த பிரிவினைவாதத்தையும், அதனைத் தொடர்ந்த மதக் கலவரத்தையும், விவரிக்கிறது இந்நூல். இந்த நிகழ்ச்சி நடந்து அறுபத்தொன்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அன்றைய துவேசம் இன்னும் மறையவில்லை. இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே விரோதங்கள் குறையாமல் இன்னமும் நெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது. காஷ்மீர் தினம் தினம் பற்றிஎரிகிறது. இவற்றிற்கான மூலகாரணம் எது என அறிந்து கொள்ளவும், நம் தலைவர்களைப்பற்றி புரிந்து கொள்ளவும், ஒவ்வொரு இந்தியனும் படிக்கவேண்டிய புத்தகம். வரலாற்றுப் பாடம் போல் அல்லாமல் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் அடுத்த அத்தியாயம் தொடங்குவதுபோல் எழுதியிருப்பது நூலின் சிறப்பு. 1975 -ல் வெளிவந்த இந்நூல் பாகிஸ்தானில் தடைசொய்யப்பட்டுள்ளது. தற்போதுதான் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.சிறந்த வரலாற்று ஆவணம்.அபூர்வ சில புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் சுதந்திரம்
டொமினிக் லேப்பியர் - லேரி காலின்ஸ். 
தமிழில். வி. என். ராகவன்.
மயிலை பாலு.
அலைகள் வெளியீட்டகம்.

சர்வதேச இரட்டை எழுத்தாளர்கள். இருவரும் தம் மொழிகளில் எழுதுவார்கள். ஒருவர் ஆங்கிலம் மற்றொருவர் ஃப்ரஞ்ச். இவர்களது படைப்புகள் முழுமையான ஆய்வுவவிவரங்களுடன், கவனத்துடனும் அமைந்திருக்கும். இவற்களது பிற படைப்புகள், O Jerusalem,
Is Paris Burning?, Or I 'll Dress You in Mourning,
Mountbatten and the Independent India,
The Fifth Horseman.