☰ உள்ளே....

ஒரு நாய் ....ஒரு துப்பாக்கி....ஒரு கதை......

சிறுவனுக்கு நிலையாமையை உணர்த்திய நெகிழ்வான சம்பவம்!


அவள் இப்போது டால்பினாகிவிட்டாள்என்றான் ஆர்ச்சர். என்னுடைய மூன்று வயது மகன் ஆர்ச்சர் ஒரு துப்பாக்கியை வாங்க வேண்டும் என்று கேட்கிறான், அதுவும் இப்போதே, உடனே
எங்கள் வீட்டில் துப்பாக்கி கிடையாது. துப்பாக்கியை இவன் எங்கே பார்த்தான் என்றும் தெரியவில்லை. அவன் பார்க்கும் கார்ட்டூன் படங்களில் இருந்திருக்குமோ? அவன் பொம்மைத் துப்பாக்கியைக் கேட்கவில்லை, யாரையாவது சுட்டுக்கொல்லும் நிஜ துப்பாக்கியை. அவனுடைய செல்ல வளர்ப்பான எஸ்மெரல்டா என்ற கோழியை இன்னொரு பிராணி கொன்றதை நேரில் பார்த்த அடுத்த நிமிடமே துப்பாக்கியைக் கேட்க ஆரம்பித்துவிட்டான்.

என்னுடைய பெற்றோரும் அவனும் வீட்டின் முன் அறையில் இருந்தபோது அந்தச் சம்பவம் நடந்தது. எங்கள் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் இடையிலான இடத்தில் ஆடுகள், கோவேறு கழுதைகள், மான், நாய் போன்றவை வளர்கின்றன. திடீரென என்னுடைய அம்மாவின் அலறலைக் கேட்டதும் வாயிலறைக்கு ஓடினேன். கோழியைக் கவ்விக்கொண்டிருந்த நாயைப் பார்த்தேன். அதை விரட்ட வீட்டைவிட்டு வெளியே ஓடினேன். எஸ்மெரல்டா அப்போது உயிருடன்தான் இருந்தாள்.
ஆனால், உடலின் உள்ளுறுப்புகள் அனைத்தும் தெரியும் அளவுக்குச் சிறகுகள், தோல் அனைத்தும் உரிந்துவிட்டிருந்தன. எஸ்மெரல்டாவை எடுத்துவர என்னுடன் அப்பாவும் வந்தார். அதைக் கையில் எடுத்தார். நான் அதன் மார்பைத் தொட்டுப்பார்த்தேன். சூடாக இருந்தது. காயமடைந்த பறவைகளைக் கையில் எடுத்ததும் அதன் தலையை மென்மையாகத் திருகுவதைப் போல, எஸ்மெரல்டாவையும் தடவிக்கொடுத்தார். என்னுடைய தாத்தாவுடன் வேட்டைக்குச் செல்லும்போது பறவைகளைக் கையாள அவர் பழகியிருந்தார். ஆனாலும் பலனில்லை. எஸ்மரெல்டாவின் உயிர் துடித்து அடங்கும்வரை அதன் உடலிலிருந்து சிறகுகள் பிய்ந்து உதிர்ந்துகொண்டிருந்தன.
ஆர்ச்சர் அந்த நாய், எஸ்மெரல்டாவைக் கவ்வியதை மட்டும்தான் பார்த்தான். மேற்கொண்டு பார்க்க விடாமல் என்னுடைய அம்மா அவனைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டுவிட்டார். எஸ்மெரல்டாவைப் பார்க்க வேண்டும் என்று அவன் என்னைக் கேட்டபோது, அவன் உடலே பந்துபோலச் சுருண்டு குன்றிப் போயிருந்தது. வேண்டாம் என்றார் என் அம்மா. பார்க்கட்டும் என்றேன் நான். நாயால் கோழி கவ்வப்பட்டதைப் பார்த்த என் மகன், அதற்குப் பிறகு என்ன ஆனது என்று தெரியாமல் இருக்கக் கூடாது என்று நினைத்தேன்.
பனியில் நனைந்து ஊறிய மண் தரையில் நடந்த போது, “எஸ்மெரல்டா எனக்கு உயிரோடு வேண்டும்என்று கூறி அழுதான். மண்ணைக் கிளறி பள்ளம் தோண்டும் வரையில் அதைப் புதைக்க முடியாது என்பதால், பனிபடர்ந்த தரையில் அப்படியே வைத்திருந்தோம். ரத்தம் சொட்டுச்சொட்டாகக் கசிந்து தரையைச் சிவப்பாக்கியிருந்தது. ஆர்ச்சர் என் மீது சாய்ந்துகொண்டான். அவன் போட்டிருந்த கோட்டால் முகத்தைப் பாதி மறைத்துக்கொண்டான். தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்திருந்தான்.
சாவு என்றால் என்ன?
சில நாட்களுக்கு முன்னால்தான் அவனிடம், “சாவு என்றால் என்னவென்று தெரியுமா?” என்று கேட்டிருந்தேன். காரணம் இருக்கிறது. அவன் மரவட்டைகளை எடுத்துக் கையில் அழுத்திப் பிடித்துக்கொள்வான். அப்படிச் செய்தால் அவை செத்துவிடும் என்பதை உணர்த்தத் தான் அப்படிக் கேட்டேன். உடம்பிலிருந்து உயிர் போவதுதான் சாவுஎன்று பதில் அளித்தான். அது இப்போது நினைவுக்கு வந்தது.
திரும்ப வீட்டுக்குள் வந்தோம். எஸ்மரெல்டாவின் உயிர் பிரிந்த பிறகு என்ன ஆனது? அது எங்கே போனது?” என்று கேட்டான்.
எஸ்மெரல்டாவின் உடல் மண்ணுக்குள் புதைக்கப் படும். அது தோட்டத்தில் உள்ள தாவரங்களுக்கும் இதர பிராணிகளுக்கும் ஊட்டச்சத்தாகிவிடும்என்று மட்டும் பதில் அளித்தேன். எஸ்மெரல்டா இட்ட முட்டை களைச் சாப்பிட்டுவந்ததால் எங்கள் குடும்பத்தின் ஒவ்வொருவரிடத்திலும் அவள் வாழ்ந்தாள். அவளுடைய உடல் புதைக்கப்பட்டதும் புற்கள் வளரவும் கோழிக் குஞ்சுகள் தீனியெடுக்கவும் உதவுவாள். அவளுடைய சக்தி எல்லா உயிர்களிலும் கலந்துவிடும்என்று கூறினேன்.
அவள் இப்போது டால்பினாகிவிட்டாள்என்றான் ஆர்ச்சர். ஆமாம்! என்று லேசாகச் சிரித்தபடியே ஆமோதித்தேன். இப்போது எல்லாம் சரியாகிவிட்டதாக நினைத்தேன். திடீரெனக் குரலை உயர்த்திய ஆர்ச்சர், “நம்மிடம் துப்பாக்கி இருக்க வேண்டும், அந்தப் பொல்லாத நாயைச் சுட்டுக்கொல்லப் போகிறேன்என்று கறுவினான்.
அவனை என்னுடைய மடியில் கிடத்திக்கொண்டு பேச ஆரம்பித்தேன், “அந்த நாய்க்குப் பசி. இரை தேவைப் பட்டது. அது உயிரோடு வாழ வேண்டுமென்றால் இதைப் போல எதையாவது சாப்பிட்டாக வேண்டும். நாம்கூடப் பசியாக இருக்கும்போது கோழிக்கறி சாப்பிடுகிறோம்; நாய்களும் பசிக்கும்போது கோழியைப் பிடித்துச் சாப்பிடுகின்றன. அந்த நாயைக் கொல்வதால் நம்முடைய எஸ்மெரல்டா நமக்குத் திரும்பக் கிடைத்துவிட மாட்டாள்என்றேன்.
நாம் கோழிக் குஞ்சுகளைக் காப்பாற்றியாக வேண்டுமே?” என்றான்.
அந்த நாய் நம்முடைய வீட்டுக்கு முன்னால் வந்ததும் எஸ்மெரல்டாவின் கழுத்தைக் கவ்விக் கடித்ததும் நல்லதில்லைதான். அதற்காகவே அந்த நாயைப் பொல்லாதது என்று கூறிவிட முடியாது. சில வேளைகளில் நல்ல நாய்கள் மோசமான செயல்களைச் செய்துவிடுகின்றன. பொல்லாத நாய்கள் நல்லதையும் செய்கின்றன. இதுவே மனிதர்களுக்கும் பொருந்தும்என்றேன்.
ஆர்ச்சர் மவுனமாக உட்கார்ந்து நான் சொன்னதை யெல்லாம் மனதில் அசைபோட்டுக்கொண்டிருந்தான். வாழ்வு, சாவு, பழிவாங்கல், மன்னித்தல் எல்லாம் அவன் மனதுக்குள் ஓடியிருந்திருக்க வேண்டும்.
எஸ்மெரல்டாவுக்கு என்ன நடந்தது என்று என் மகனுக்குப் புரிய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், நான் சொன்னதிலிருந்தும், அவன் பார்த்ததிலிருந்தும் எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருப்பான் என்று எனக்கு நிச்சயமாக எதுவும் தெரியவில்லை. துப்பாக்கி வேண்டும் என்று அவன் கேட்டதே, நல்ல தந்தையாக இருக்க நான் தவறிவிட்டேனோ என்ற சந்தேகத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது. எல்லா தகப்பனார்களையும் போல நான் எதையாவது சொல்லித் திசைதிருப்பியிருக்க வேண்டுமோ?
நாயின் மறுவருகை
மாதங்கள் உருண்டோடின. வசந்த காலம் வந்தது. எஸ்மெரல்டாவைப் புதைத்த இடத்தில் புற்களும் பூச்செடிகளும் வளர்ந்திருந்தன. அன்றைக்கு மிதமான வெயில் அடித்தது. வாசலைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோம். அப்போது அந்த நாய் வந்தது. தோட்டத்துக்குப் போட்டிருந்த கேட்டைத் தள்ளிக்கொண்டு அதனால் உள்ளே வர முடியவில்லை. ஆர்ச்சருக்கு அந்த நாயை அடையாளம் தெரியவில்லை. எனக்குத் தெரிந்துவிட்டது. அந்த நாயை எடுத்து வளர்க்க வேண்டுமென்று அவன் ஆசைப்பட்டான். நமக்கு நன்றாகத் தெரியாத நாயை வளர்க்கக் கூடாது என்றேன். அவன் அழுது அடம்பிடித்தான். அவனுடைய அழுகையைச் சமாளிக்கத் தெரியாமல் நான் உண்மையை உளறிவிட்டேன். இந்த நாய்தான் உன்னுடைய எஸ்மெரல்டாவைக் கொன்றதுஎன்றேன்.
கண்களை அகல விரித்து அந்த நாயையே பார்த்துக்கொண்டிருந்தான். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமலேயே நான் அவனிடம், “இந்த நாயிடம் ஏதாவது சொல்ல ஆசைப்படுகிறாயா?” என்றேன்.
தோட்டத்து வேலிவரை நடந்து சென்றான். வேலியை நெருங்கியதும் அந்த நாயைப் பார்த்துக் குனிந்து மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான். நாயே, இனிமேல் கோழிகளைப் பிடித்துக் கடிக்காதேஎன்றான். நாய் அவனிடம் நெருங்கி வந்தது. ஆர்ச்சரை இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவிடலாமா என்று நினைத்தேன். அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். அந்த வேலி அவனுக்குப் பாதுகாப்பாக இருந்தது.
இன்னும் ஏதாவது சொல்ல வேண்டுமாஎன்று கேட்டேன். ஆமாம் என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினான். நாயிடமிருந்து அவனைப் பிரிக்கும் அந்த வேலிமீது சாய்ந்துகொண்டான். இந்த உலகில் நிலையாதது, கடினமானது எவையெவை என்று மிகச் சிறிய வயதிலேயே அவனுக்கு உணர்த்திய அந்த ஜீவன் அப்போதும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. நாயைக் கொல்ல எதாவதொரு ஆயுதத்தைக் கேட்கப்போகிறானோ என்ற அச்சத்தில் காதைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தேன்.
அந்த நாயின் கண்களைப் பார்த்து அவன் பேசினான். நாயே நீ செய்தது தவறு, இருந்தாலும் நான் உன்னை மன்னிக்கிறேன்.