டாலர் தேசம் ....


இந்த புத்தகம், கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தைக் கண்டுபிடித்ததில் தொடங்கி தற்போதைய நிகழ்வுகளில் முடிகிறது. கொலம்பஸ் கண்டுபிடித்தவுடன், ரோம் நகரத்தின் போப் கண்ணசைவில் சில ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இங்கு குடியேறத் துவங்கின. அதன் பிறகு நாடு பிடித்துப் பணம் சம்பாதிக்கும் ஆசையில் பிரிட்டிஷ், ஃப்ரான்ஸ், ஸ்பானிஷ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவில் தங்கள் குடியேற்றங்களை அமைத்தனர்.
இவர்களில் போட்டியில் செவ்விந்தியர் எனப்படும் அமெரிக்காவின் பூர்வக் குடிமக்கள் எப்படியெல்லாம் தங்கள் சொந்த மண்ணை விட்டுத் துரத்தி அடிக்கப்பட்டார்கள் என்பதை முதல் சில பக்கங்கள் விவரிக்கின்றன.
குடியேறிய காலனிகள் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தாம் ஐரோப்பியர் என்பதையே மறந்து தங்களை ஐரோப்பிய தாய் நாட்டு சட்ட திட்டங்களிலிருந்து விடுபடுத்திக் கொள்ள விடுதலைப் போரைத் துவங்கியிருக்கின்றனர். ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் போர்களில் வென்று சுதந்தரமும் பெற்றனர். ஜார்ஜ் வாஷிங்டன் தான் அமெரிக்காவின் முதல் அதிபர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நமக்கு, ஜார்ஜ் வாஷிங்டனுக்கு முன்னால் ஆறு தலைவர்கள் அமெரிக்காவை ஆண்டனர் என்பது புதிய தகவல். 

குடியேறிகளான வெள்ளை அமெரிக்கர்கள் (முன்னாள் ஐரோப்பியர்கள்) தங்களுக்கு அடிமை வேலை செய்ய ஆப்பிரிக்க நாட்டு கருப்பர் இன மக்களை இறக்குமதி செய்து கொண்டனர். இந்த அடிமைகள் வெள்ளைக்காரர்களின் பண்ணைகளில், வீடுகளில் மிகக் கடுமையா வேலை செய்து வந்திருக்கின்றனர். மிக சொற்ப இரு வேளை உணவுக்காக தன் முதலாளிகளிடம் அடிபட்டு செத்த அடிமைகள் ஏராளம். அமெரிக்க அரசாங்கமே இதைப் பகிரங்கமாக ஆதரித்து வந்தது தான் கொடுமை. ஆபிரகாம் லிங்கன் காலத்தில் தான் அரசாங்கம் தன் கடமையை செய்து, இவர்களின் முன்னேற்றத்து வழி வகுத்தது. இந்த கருப்பர் இன மக்களின் அவதியை ஆசிரியர் நன்றாக விவரித்துள்ளார்.  
அமெரிக்கா என்றாலே பணம் பணம் பணம் என்று நினைவுக்கு வரும் அளவுக்கு அவர்கள் முன்னேற என்ன காரணங்கள்? பெரும்பாலான அரசியல்வாதிகளின் கை சுத்தத்திற்கு என்ன காரணம்? (பெரும்பாலானோர் கட்டுப்பாடு மிக்க ராணுவத்தில் சாதனை செய்து ஓய்வு பெற்றவர்கள்) அமெரிக்கர்களின் நாட்டுப்பற்று எப்படிப்பட்டது? அவர்களின் மிகச் சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் எப்படி சாத்தியமாயின? அவர்களின் உழைப்பு எவ்வளவு தீவிரமானது? சர்க்கரைப் பாகில் தேன் கலந்து வேப்பங்காயில் தடவிய அந்த முதலாளித்துவம் எப்படி சாத்தியமாயிற்று? அத்தனைக் கேள்விக்கும் பதில் தெரிந்துகொள்ள கட்டயம் படிக்கவேண்டிய புத்தகம். குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ப.ராகவன் எழுதிய தொடர்தான் புத்தக வடிவில் டாலர் தேசமாக வெளியிடப்பட்டுள்ளது.