கதாவிலாசம்...எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள்-சமூகத்தின் சாட்சிகள்! ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் விரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியபடி வாழ்ந்துகொண்டே இருக்கும் எப்போதும். நம் தமிழ் மரபே கதை மரபுதான்.

வைத்தது யார் எனத் தெரியாமல் வளர்ந்து அடர்ந்துகிடக்கிற வனத்தைப்போல கதைகளும் நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் கதைகளின் கைகளைப் பிடித்து நடை பழகியவர்கள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த 'கதாவிலாசம்'. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த அனுபவங்களையும் சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார் எஸ்.ரா. பாரதியாரிலிருந்து தமயந்தி வரை தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் கதைகள் இந்தப் பட்டியலில் அடக்கம். வாழ்க்கை எவ்வளவு மகத்துவமானது, காலம் எவ்வளவு விசித்திரமானது, மனிதர்கள்தான் எத்தனைவிதமான எண்ணங்களோடு வாழ்கிறார்கள் என ஏராளமான ஆச்சரியங்களையும் கேள்விகளையும் இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் எழுப்புகிறது. இதைப் படிக்கும்போது கல்லெறிந்த குளம் மாதிரி நம் மனத்தில் அலையடித்துக்கொண்டே இருக்கிறது. சேரிகளின் அவல நிலை தொடங்கி சென்னை வாழ் குஜராத்திகளின் வாழ்நிலை வரை பேசுகிற எழுத்துக்கள்.
வாழ்வின் நிஜமான விலாசத்தைத் தேடி பயணம் பண்ணுகிற இந்த 'கதாவிலாசம்' இதமான இலக்கியப் பதிவு. ஐம்பது எழுத்தாளர்களின் வெவ்வேறு விதமான சிறுகதைகள், அதையொட்டிய ராமகிருஷ்ணனின் அனுபவங்கள் என்பதால் இந்தப் புத்தகம் படிக்கிற ஒவ்வொருவருக்கும் இது மிகப்பெரிய வாழ்வனுபவமாக இருக்கும். ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்தபோது பெரும் வரவேற்பைப் பெற்றது. இலக்கியஉலகத்தை மேலோட்டமாக அறிந்துகொள்ள உதவுகிறது.தவறாமல் படியுங்கள்.