சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியத் துணைக்கண்டத்தில் அசாதாரணமான பல சம்பவங்கள் நடந்தேறின. அதன் வட மேற்குப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்க ஆரம்பித்தது. மண் அரிப்பும் நில நடுக்கங்களும் சேர்ந்து கொள்ளவே அங்கு பாய்ந்த நதிகளின் பாதைகள் தாறுமாறாக ஆகின. அவற்றில் ஒன்று என்றென்றைக்குமாக மறைந்துபோனது. அதுதான் வேதங்களிலும் மகாபாரதத்திலும் வெகுவாகப் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதி.
புவியியல் மற்றும் தட்பவெப்பவியல் ஆய்வுகள் சமீப காலங்களில் அந்த நதியின் பரிணாம வளர்ச்சியை வெகு துல்லியமாக முன்வைத்திருக்கின்றன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் நதியின் மறைந்துபோன தடத்தை அடையாளம் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கின்றன. ஐஸோடோப்பு ஆய்வுகள். அந்தத் தார் பாலைவனத்தில் சரஸ்வதி நதியின் புராதன நீர் இன்றும் பூமியின் அடி ஆழத்தில் தேங்கிக் கிடப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.சரஸ்வதி நதியை மீட்டெடுப்பதன் வாயிலாக இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய பாகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்தப் புத்தகம்.



காவிய நதியான சரஸ்வதி நதியைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்று எந்த நிலையில் இருக்கின்றன என்பதை வெகு ஜனத் தளத்துக்குக் கொண்டு செல்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். பல்வேறு துறைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து, மிக அதிக நம்பகத்தன்மை கொண்ட முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே என் வாதங்களை முன் வைத்திருக்கிறேன்.இந்தியா தொன்மக் கதைகளை நேசிக்கும் தேசம். இந்த தேசத்தின் அனைத்து இலக்கியப் பிரதிகளிலும் வாய்மொழிக் கதைகளிலும் இவையே நிறைந்து காணப்படுகின்றன. தொன்மக் கதைகள் என்பதன் மூலம் கதாநாயக சாகசங்களையும் தெய்விக அற்புதங்களையும் கலந்து நெய்யும் சிக்கலான, பல அடுக்கு கொண்ட பெருங்கதையாடலையே குறிப்பிடுகிறேன். வலுவான குறியீடுகள் மூலம் மக்களின் மனங்களில் குறிப்பிட்ட மதிப்பீடுகளை அவை பதிய வைக்கின்றன. காலப்போக்கில் அவை மக்களுடைய பழக்க வழக்கங்களுடனும் பாரம்பரியத்துடனும் இரண்டறக் கலந்துவிடுகின்றன. இன்றைக்கும் கூட இந்தியாவின் வடகிழக்கில் வசிக்கும் சில பழங்குடியினர் ராமாயணத்திலிருந்தும் மகாபாரதத்திலிருந்தும் சில காட்சிகளை நிகழ்த்திக் காட்டுவதுண்டு. அரண்மனைக்குப் பதிலாக மூங்கில் குடிசைகள்தான் இருக்கும் என்றாலும் அலங்காரங்கள் அல்ல, அடிப்படை விஷயமே முக்கியம்.

இந்தத் தொன்மக் கதைகளுக்கு வரலாற்று அடிப்படை இருக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம். ஆனால், அவை வடிவமைத்து உருவாக்கிய மனங்களில் வாழும் அல்லது செயல்படும் வரையிலும் அது 'உண்மையே'. எப்போதோ பிரளயம் நடந்தது, கடலைக் கடைந்தது, கங்கை பூமிக்கு இறங்கி வந்தது, வானரப்படை இலங்கைக்குப் பாலம் அமைத்தது, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைச் சுண்டுவிரலால் தூக்கிப் பிடித்தது ஆகிய அனைத்துமே அந்தவகையில் உண்மையே. நமது வரையறைக்குட்பட்ட அர்த்தத்தின் படி அவை 'உண்மையில் நடந்தவையா' என்பது பொருட்டே அல்ல. தொன்மமானது உண்மையான வரலாற்றுச் சம்பவத்திலிருந்து உருவாகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அது வரலாற்றை உருவாக்கவே செய்கிறது

கிரேக்கமோ பாலினீசியனோ இந்தியத் தொன்மமோ எதுவாக இருந்தாலும் பழங்கால அல்லது பாரம்பரிய சமுதாயங்களில் அவை செலுத்திய தாக்கத்தை நம்முடைய நவீன மனங்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், இன்றைய சமூகங்கள் 'தொன்மங்கள் அற்றவை'. நல்லதோ கெட்டதோ நம் அக உலகங்களில் இருந்து அவற்றை அகற்றிவிட்டோம். 'மித்' என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் 'வார்த்தை' அல்லது 'பேச்சு' என்று பொருள். சமஸ்கிருதத்தில் 'வாக்' என்று சொல்லப்படுவதற்கு இணையானது. ஆனால், இன்று அதை கட்டுக்கதை, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நீதிக்கதை அல்லது கூட்டு நனவிலி என்ற பொருளைத் தரும்படியாக ஆக்கிவிட்டோம்.
நமது இந்தப் புத்தகம் மிகவும் தொன்மையான இந்தியப் படைப்பான ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'தொன்ம' நதியில் இருந்து ஆரம்பிக்கிறது. மகாபாரதம் உட்படப் பிந்தைய இலக்கியங்களில், சரஸ்வதி நதி மெல்ல 'மறைந்து கொண்டிக்கும்' ஒன்றாகவும் கடைசியில் 'கண்ணுக்குத் தெரியாததாகி'விடுவதாகவும், கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் அவற்றுடன் இணைந்து விடுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, அது இன்று நாம் அறிந்திருக்கும் சரஸ்வதி தெய்வமாகிவிடுகிறது.
இந்தத் தொன்மமானது வெறும் கற்பனையான ஒன்றல்ல. ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'பிரமாண்ட நதி'யானது பண்டைய இந்தியாவின்* வடமேற்குப் பகுதிகளில் பாய்ந்து, இப்போது வறண்டு போயிருக்கும் நதியோடு, அதாவது சிந்து நதிக்கு இணையாக, அதற்கு சற்றே தென் திசையில் ஓடிய நதியோடு பெரும்பாலான நிபுணர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. 'மறைந்து போன' இந்த நதியைக் கண்டுபிடிக்க மேற்கொண்ட தேடல் முயற்சிகள், இதுவரை மக்களுக்கு முழுவதாகச் சொல்லப்படவே இல்லை.

சரஸ்வதியை சமீபத்தில் செயற்கைக்கோள் புகைப்படங்களின் உதவியுடன் தான் 'மீண்டும் கண்டுபிடித்தோம்' என்ற எண்ணம் மக்களிடையே நிலவுகிறது. இது தவறு. மாறாக, பிரிட்டிஷ் நிலவியல் ஆய்வாளர்களும் அன்றைய பிரிட்டிஷ் அரசின் சிவில், ராணுவ அதிகாரிகளும் இந்தப் பகுதியில், அதாவது இன்றைய ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும், பாகிஸ்தானில் உள்ள கோலிஸ்தான் பாலைவனத்திலும் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஆய்வு செய்திருக்கின்றனர். அவர்கள் சரஸ்வதி ஆற்றின் படுகையை மட்டுமல்லாமல் அதன் இரு கரைகளிலும் ஏராளமான, சிதிலம் அடைந்துள்ள குடியிருப்புகளையும் கண்டுபிடித்துள்ளனர்.
இன்று வறண்டு, ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும் இந்தப்பகுதி ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்திருக்கும் என்பதன் மவுன சாட்சிகள் அவை. உண்மையில், 1850-களிலேயே அந்த 'தொன்ம நதி'யின் வழித்தடம் இந்தியவியலாளர்களுக்குச் சந்தேகமறத் தெரிந்திருந்தது. இந்தக் குடியிருப்புகள் ஹரப்பா அல்லது சிந்து சமவெளி நாகரிகக் காலத்தைச் சேர்ந்தவை என்பது பல ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கலாசாரத்தின் பல அம்சங்கள், அங்குள்ள நகரங்கள் அழிந்த பின்பும் கூடத் தொடர்கின்றன. சில நகரங்கள் ஆச்சரியப்படும் வகையில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை அகழ்வாராய்ச்சிகளிலிருந்து கிடைத்த விஷயங்களையும் புராதன இலக்கியங்களில் சொல்லப்பட்ட செய்திகளையும் ஒருங்கிணைப்பது முடியாத செயலாக இருக்கிறது. அகழ்வாராய்ச்சியாளர்கள் அப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதை மோசமான செயலாகக் கருதி அதில் ஈடுபடுவதில்லை. இலக்கிய அறிஞர்கள் இலக்கியங்களில் இருந்து உருவாக்கும் சித்திரத்துடன் அகழ்வாய்வுத் தரவுகளைப் பொருத்திப் பார்க்க முயற்சி செய்வதே இல்லை. சரஸ்வதி நதியைப் பொறுத்தவரையில், இந்த இரண்டு துறைகளுக்கு இடையில் ஆச்சரியப்படும் வகையிலான ஒத்திசைவுகள் இருக்கின்றன.

ஆக, அந்த நதி பாய்ந்தது உண்மை என்று நிரூபணமாகிவிட்ட தென்றால் நாம் அதற்கு முன்புவரை நம்பிவந்த சரித்திரத்தை அதற்கு ஏற்ப மறுபரிசீலனை செய்வது தானே முறை. ஆனால், துரதிருஷ்டவசமாக ஆரியப் படையெடுப்பு அல்லது ஆரிய இடப்பெயர்வு என்ற கோட்பாட்டுக்குள் சரஸ்வதி நதி சிக்கிக் கொண்டு விட்டது.

சரஸ்வதி பற்றிக் கிடைத்திருக்கும் அகழ்வாராய்ச்சித் தகவல்கள் ஆரியப் படையெடுப்பு என்ற ஒன்று நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதையே உணர்த்துகின்றன. சிந்து சமவெளி நாகரிகம் என்று நாம் இன்று சொல்லும் நாகரிகம் உண்மையில் சிந்து - சரஸ்வதி நதிச் சமவெளியின் நாகரிகமே. சரஸ்வதி நதி இயற்கைக் காரணங்களால் வற்றியதைத் தொடர்ந்தே சிந்து சமவெளி மக்களில் சிலர் தென்னிந்தியா நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். எஞ்சியவர்கள் கங்கைக் கரை நோக்கி இடம்பெயர்ந்திருக்கிறார்கள். ஆரியர்கள் என்று யாரும் வெளியில் இருந்து வரவில்லை.
சிந்து சமவெளியில் கிடைத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்களுக்கும் திராவிடர்களுக்கும் இருப்பதைப் போலவே வேத கால நாகரிகம் என்று சொல்லப்படும் கங்கைச் சமவெளிப் பகுதியில் கிடைத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்களுக்கும் இடையிலும் மிகுந்த ஒற்றுமை இருக்கின்றன. வேத நாகரிகம் என்பது சிந்து சமவெளி நாகரிகத்தை அழித்துப் பிறந்ததல்ல, அதன் நீட்சியே என்பதுபோன்ற பல உண்மைகளை சரஸ்வதி நதியின் கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது. இது இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் பலருடைய இருப்பை அடியோடு நிர்மூலமாக்கிவிடும். காலடியில் இருக்கும் நிலம் திடீரென்று இல்லாமலாகி அதலபாதாளத்தில் அலறியடித்தபடியே அவர்கள் விழவேண்டிவந்துவிடும். என்ன செய்ய... ஆரய்ச்சி சூரியன் உதித்தால் புரட்டு இருள் மறைந்துதானே ஆகவேண்டும்.
வாருங்கள், அசத்தியத்திலிருந்து சத்தியத்தை நோக்கி, இருளில் இருந்து ஒளியை நோக்கி, அழியும் பொய்யிலிருந்து அழியா உண்மையை நோக்கி நம் பயணத்தைத் தொடங்குவோம்.

சரஸ்வதி : ஒரு நதியின் மறைவு
மிஷல் தனினோ
தமிழில் : வை. கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு பதிப்பகம்
பக்கம் 416
விலை ரூ.300