மழை.





இரவு 2.00 மணி பீகார்- பாட்னா லால்பக்ஹ் சாலையில் சுற்றிக் கொண்டிருந்தேன் வழக்கம்போல் போலீஸ் பிடித்துக் கொண்டார்கள். (ஹீ..ஹி அதிகமுறை மாட்டிக்கொண்டு விழித்திருக்கிறேன் ) நம்ம ஊரென்றால் எதாவது  அரசியல்வாதி, தெரிந்த மாமா, மச்சான் பெயரைச் சொல்லி  50-100 கொடுத்து வந்துவிடலாம் ஆனால் இங்கு நிலமை வேறு. பீகாரில் அடியேனுக்கு தெரிந்த ஒரே நபர் நம்ப லாலுபிரசாத்யாதவ் மட்டுமே. வெளிஊர்-மொழியும் கொஞ்சம் சிரமமாக இருந்தது தெரிந்த ஆங்கிலத்தில் பேசி அடையாள அட்டையை காண்பித்து ஒருவாறு சமாளித்தேன்.

2.00 மணிக்கு உனக்கு இங்க என்ன வேலை? ...

சார், டீ குடிச்சிட்டு ஒரு தம் அடிச்சிட்டு போகலாம்....னு.....  தூக்கம் வரவில்லை என்றேன்.

உண்மையான காரணமும் அதுதான். என் தூக்கத்தை கலைத்த படைப்பு இந்த ஈரான் நாட்டுத் திரைப்படம் "Baran".

17 வயது லதீப் , ஈரானில் உள்ள தெஹ்ரானில் கட்டிட வேலை நடக்கும் இடத்தில் சமையல் செய்யும் எடுபிடியாக இருக்கிறான். மெமர் என்பவரின் மேற்பார்வையில் இயங்கும் கட்டிட வேலைக்கு ஈரானின் எல்லையில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகள் சிலர் குறைந்த கூலிக்கு வேலைக்கு முறையற்று அனுமதியின்றி வருகின்றனர்.அழகிய பனிக்காலம், அகதிகளில் ஒருவனான நஜாப் வேலை செய்யும்போது தவறி கீழே விழுவதில் கதை தொடங்குகிறது. 

மறுநாள் சுல்தான் என்பவர் கீழே விழுந்து கால்களை இழந்த நஜாப்பிற்கு பதிலாக அவரது 14 வயது மகன் ரஹ்மத்தை வேலைக்கு அழைத்து வருகிறார். கடினமான கட்டிட வேலை செய்ய முடியாமல் ரஹ்மத் திணறுகிறான் மெமர் சமையல் செய்யும்  வேலையை  ரஹ்மத்திடம் கொடுத்துவிட்டு லதீப்பை கட்டிட வேலைக்கு மாற்றுகிறார். இதனால்  ரஹ்மத்திற்கு லதீப் சிறுசிறு தொல்லைகள் கொடுக்கிறான் அவனை அங்கிருந்து விரட்ட முயற்சி செய்கிறான்.

ருசியோடு ரஹ்மத் செய்யும் சமையலுக்கு அங்கு வேலை செய்யும் அனைவரும் அடிமையாகின்றனர் லதீப் மட்டும் அவனது சமையலை சாப்பிடாமல் தவிர்க்கிறான். ஒருநாள் லதீப் எதார்த்தமாக ரஹ்மத்தின் அறையை நோட்டமிடுகிறான். அனைவரும் வேலையில் மும்மரமாக இருக்க பாடலை முனுமுனுத்தபடி வேலைகளை முடித்துவிட்டு தன் தலைமுடியை சீவி, மீண்டும் டர்பனுக்குள் மறைத்துக் கொள்ளும் ரஹ்மத்தை நிழலாகக் கண்டு அவன் அதிர்சியடைகிறான்.

 "ரஹ்மத் ஒரு பெண்".

அன்றிலிருந்து தனது செயல்களிலிருந்து லதீப் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறான் வெறுத்து ஒதுக்க நினைத்த ரஹ்மத்தின் பார்வைக்காக ஏங்குகிறான். மேலும் அங்குவேலை செய்யும் ஆண்களிடமிருந்து அவளுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறான். ஒருநாள் கடைக்குச் சென்று திரும்பிவரும் ஆப்கானிஸ்தான் அகதியான ரஹ்மத்தை factory laubour inspector பார்த்து விடுகிறார் லதீப் அவரிடம் இருந்து அவளை காப்பாற்றிவிட்டு காவல் நிலையம் செல்கிறான். மெமர் அவனை ஜாமீனில் எடுத்துவிட்டு ஆப்கானிஸ்தான் அகதிகளை அனைவரையும் வேலையிலிருந்து அனுப்புவதாக கூறுகிறார்.

மெமர் ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியனுப்ப மறுநாள் லதீப் ரஹ்மத்தை காணமல் தவிக்கிறான் அவளது நினைவுகளைச் சுமக்கிறான். சில நாட்களுக்குப்பின் சுல்தானிடம் இருந்து தகவல்களை பெறுகிறான். ரஹ்மத் ஈரான் எல்லையை ஒட்டிய ஒரு கிராமத்தில் நடக்கமுடியாமல் போன தன் தந்தையுடன் வசிப்பதாக தெரிந்துகொண்டு அவளை பார்க்கச் செல்கிறான். அன்று கிராமத்தில் நடக்கும் விழாவில் கலந்துகொள்கிறான் அங்கு அவனை பார்க்கும் ரஹ்மத் கண்டுகொள்ளாதவாறு நடந்து கொள்கிறாள். லதீப் ரஹ்மத் வீட்டை கண்டுபிடிக்க சிரமப்பட்டு ஏமாற்றத்துடன் திரும்புகிறான். மீண்டும் சுல்தானை சந்திக்கிறான் ரஹ்மத்தின் குடும்ப பின்னணியை தெரிந்துகொள்கிறான். அவளது பெயர் Baran (பரான்) என்றும் போரில் தன் அண்ணனை இழந்து நடக்க இயலாத தந்தையுடன் வறுமையில் வாடுகிறாள் என்றும் தெரிந்துகொண்டு அவளுக்காக கண்கலங்குகிறான். ரஹ்மத் ஆற்றங்கரையில் வேலை செய்துகொண்டிருப்பதாக சுல்தான் கூறுகிறார் ஓடிச்சென்று தூரத்திலிருந்து அவளைத் தேடுகிறான். சில பெண்களுடன் சேர்த்து கடினமான கற்களை தூக்கி ஆற்றை சுத்தம் செய்துக் கொண்டிருக்கும் ரஹ்மத் மயங்கி விழுவதை லதீப் பார்கிறான். அவளது ஏழ்மையை உணர்த்த அவன் அவளுக்காக எதாவது செய்ய நினைக்கிறான். தான் இதுவரை சேமித்து வைத்த பணத்தை சுல்தானிடம் கொடுத்து நஜாபிடம் (ரஹ்மத்தின் தந்தை) கொடுக்கச் சொல்கிறான். ஆனால் சுல்தான் அவரிடம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஆப்கானிஸ்தானுக்கு குடும்பத்துடன் சென்றுவிடுகிறார்.

இதனை அறிந்த லதீப் வருந்துகிறான். மேலும் மறுநாள் கட்டிட மேஸ்த்திரி மெமரை சந்தித்து காலில் விழுந்து பணம் கேட்கிறான் குடும்ப பிரச்சனையில் இருக்கும் அவர் மறுக்க தன்னிடம் இருக்கும் விளையுயர்ந்த பொருளான தனது அடையாள அட்டையை  கள்ளத்தனமாக விற்கத் துணிகிறான் (ஆப்கானிஸ்தான், ஈரான், போன்ற அகதிகள் வாழும் நாடுகளில் அடையாள அட்டை என்பது விலைமதிக்க முடியாத சொத்து. அதை இழப்பது என்பது தன்னையே இழப்பதற்குச் சமமாக கருதப்படுகிறது) . கிடைக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ரஹ்மத்(பரான்) வீட்டிற்குச் செல்கிறான். காலில் அடிபட்டதற்கான நஷ்ட ஈடாக மேஸ்த்திரி கொடுத்ததாக அந்த பணத்தை கொடுத்துவிட்டு திரும்புகிறான்.

மறுநாள் காலை நஜாப் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு கிளம்ப சாமான்களை வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்,
லதீப் அங்கு வருகிறான் ரஹ்மத்தும் (பரான்) வீட்டிலிருந்து வெளிவருகிறாள். லதீப் முதல்முறையாக அவளது பெண்முகத்தை உடல் அருகாமையில் பார்க்கிறான் இருவரும் கண்களால் காதலை பரிமாறிக் கொள்கின்றனர். அவள் தன் கையில் இருக்கும் பையை  தவறவிடுகிறாள் லதீப் அவளுடன் சேர்த்து தவறவிட்டவைகளை சேகரிகிறான். ரஹ்மத் நடக்கத் தொடங்குகிறாள் அவளது காலணி சேற்றில் மாட்டிக்கொள்கிறது லதீப் காலனியை எடுத்து அவளுக்கு அணிவிக்கிறான். சாமான்களை ஏற்றிய வண்டி கிளம்புகிறது அதற்குள்ளிருக்கும் ரஹ்மத் தன் முகத்தை மூடிக்கொள்கிறாள். லதீப் தனிமையில் நிற்கிறான் அவளது காலடித்தடம் சேற்றில் தெரிகிறது அவன் அதைப் பார்த்து  புன்னகைக்கிறான். மழை தொடங்குகிறது தடம் மெல்ல மறைகிறது திரை இருள்கிறது மழைத்தூரல் ஒலியாகக் கேட்கிறது.

படத்தில் வரும் லதீப் ரஹ்மத்தின் நினைவாக ஹேர்பின் ஒன்றை வைத்திருப்பான் இறுதிக்கட்டத்தில் அதையும் தொலைத்திருப்பான் கடைசியாக அவள் நினைவாக காலடித்தடம் மட்டுமே இருக்கும் அதையும் மழைவந்து அழித்துச் செல்லும். சொல்லப்படாத காதலை எளிமையாக நாட்டின் போர், பொருளாதாரம், வாழ்வியலோடு கலந்து இந்த திரைப்படத்தை இயக்கியவர் புகழ்பெற்ற ஈரான் இயக்குனர் Majid Majidi. மூச்சுக்காற்று, காலடி சப்தம், கண்களின் பேச்சு இவற்றை அமைதியாக நகரும் காட்சிகளுக்கு Majid பயன்படுத்துவார். இந்த திரைப்படத்தில் வெகுசில இடங்களிலும் முடிவிலும் அதை செய்து கலங்கடித்திருக்கிறார். தேவையற்ற வார்த்தை, தேவையற்ற இசை இல்லாமல் அமைதியாக நகரும் காட்சிகள்,  இயல்பான மனிதர்கள் பனிவிழும் மழைச்சாரால் என ஒரு கவிதை புத்தகத்தை வாசிப்பதுபோல் கடக்கிறது இந்த திரைப்படம். 

சில புத்தகங்களும் திரைப்படங்களும் அதன் முடிவும் நம்மை தூங்கவிடாது இன்றும் அதுதான் நிகழ்ந்தது அடியேனை பீகாரின் காவல் நிலையம் வரைக்கும் கொண்டு சென்றது.

"Baran" என்றால் "மழை" என்று அர்த்தம் திரைப்படத்தை ஒருமுறை பாருங்கள் அந்த மழையில் நீங்களும் நனையக்கூடும். 

Directed by - Majid Majidi.
Written by - Majid Majidi.
Music - Ahmad Pejman.
Language - Persian and Azeri.
Country - Iran.
Year - 2001.