உன்னோடு நானிருக்கும் ஒரு பகல் பொழுது .......


இதற்குத்தானே  ஆசைபட்டாய்  என
வழிமீது விழி வைத்து
உன் வருகைக்காக
தவித்திருக்க
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

தாயை கண்ட சேயைப்  போல
முகமெல்லாம் புன்னகையுடன்
உன்னை வாசல்வரை வரவேற்று
தேனீர் கொடுக்க 
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

மோட்சாம் இதுவென
உன் மடிசாய்ந்து
பழங்கதைகள் பேசிமகிழ
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

தீண்டல் ,ஊடல் ,
கூடல், முத்தம் என
ஆடை இழுத்து  
உன்னோடு களியாட
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

உன்னோடு நான் நனைந்து
கூந்தல் துவட்டி,
ஆடை உடுத்தி,
மேலும் அழுகு சேர்த்து
நான் மட்டும் ரசிக்க
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

உணவு செய்து
உனக்கு ஊட்டிவிட்டு,
நீ மறுக்கும் தருணத்தில்
செல்லமாக தலைத்தட்ட
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

சுகமா? சுமையா? 
தாய்மை என
உன்னை தூக்கிச்சுமந்து
வீடு முழுவதும் சுற்றித்திறிய
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....


மார்பு சாய்த்து
தலைக்கோதி,
கதைகள்  சொல்லி,
உன்னை தூங்கவைத்து
நான் தாலாட்ட
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

உன் கைப்பிடித்து
உலகம் மறந்து,
இன்று புதிதாய் பிறந்தது போல்
நடைபழக
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

ஒரு ஆடைக்குள்
இரு உடல்நுழைத்து,
தேகம் குளிர
கண்ணோடு கண் பேச
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

உன்  தோள்சாய்ந்து, 
விரல் பிடித்து,
என் சோகங்கள் தீர
அழுது தீர்க்க
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....


அன்பே, உயிரே, கண்ணே, அமுதே
அசை வார்த்தை பேசி
என் ரகசிய இரவுவரை
உன்னை அழைத்துச்செல்ல
ஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....

அது
நான் வாழும்  
கடைசி
பகல் பொழுது.....