பட்டு.

 


”திரும்பி வா....இல்லையென்றால் இறந்துவிடுவேன்”

ஈட்டிய பொருள், எடுத்துச் சென்ற பொருட்கள் இவற்றைத் தவிர்த்து அனுபவங்களும் சில மனிதர்களும் மட்டுமே ஒரு பயணத்தின் உண்மையான மிச்சங்கள். அந்த அனுபவங்களும் மனிதர்களும் ஏதோ ஒருவகையில் அடுத்த பயணத்திற்கும் வாழ்க்கைக்கும் முதலீடாகின்றன. இந்த கதையில் வரும் ஹெர்வே ஜான்கர் என்பவனுக்கு அவ்வாறு ஒரு அனுபவம் கிடைக்கிறது. அதன் களிப்பில் மீண்டும் மீண்டும் பயணிக்கிறான். அதன்வழி வாழ்க்கையின் நிதர்சனத்தை கற்றுக் கொள்கிறான். .

இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்விலிருக்கும் ஹெர்வே ஜான்கர் தனது புதிய தொழிலான பட்டு வியாபாரத்துக்காக பிரான்சிலிருந்து உலகின் கடைசிபகுதியான ஜப்பானுக்கு செல்கிறான். பிரான்ஸ் மற்றும் ஆப்பிரிக்கநாடுகளில் கிடைக்கும் பட்டுப் புழுக்களைவிட தரமான பட்டுப் புழுக்களைக் கொள்முதல் செய்வது அவன் நோக்கம். அப்படி செல்லும்போது ஜப்பானில் புதிரான சூழலில் ஒரு பெண்னைச் சந்திக்கிறான் தொடாமலும் பேசாமலும் அவர்களுக்குள் வளரும் உறவு நாடு திரும்பியும் அவனை வசீகரிக்கிறது. மீண்டும் மீண்டும் கடல் கடந்து செல்கிறான். மூன்றாவது முறையாக அவன் செல்லும்போது அந்தபெண் ரகசியமாகக் கொடுத்த கடிதம் அவனை அலைக்கழிக்கிறது. அவனால் வாசிக்க முடியாத மொழியில் எழுதப்பட்ட அந்த கடிதத்தை வைத்துக் கொண்டு சொந்த ஊர் திரும்புகிறான் பிறகு என்ன எழுதியிருக்கிறது என தெரிந்துகொண்ட பின்பு அதில் மறைந்திருக்கும் மர்மம் அவனை வசியப்படுத்தி திகைப்படையச் செய்கிறது. மீண்டும் பயணிக்கத் தொடங்குகிறான்.

அந்த கடிதத்தில் இருந்த வார்த்தைகள். "திரும்பி வா. இல்லையென்றால் இறந்துவிடுவேன்”.

பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பின்புலத்தில் எழுதப்பட்ட இந்த நாவலை படிக்கும்போது, ஓர் உருவகக் கதையாகவும் வரலாற்றுப் புனைவாகவும் காதல் கதையாகவும் காமத்தின் தேடலாகவும் பவுத்த தரிசனமாகவும் வெவ்வேறு வடிவம் கொள்கிறது. ஒரு ஜென் நிலைபோல் நவீன பவுத்த மதத்தின் கோட்பாடுகளை உருவகக் கதையாக நம்முன் வைப்பதுபோல் தோன்றுகிறது. ஹெர்வே ஜான்கர் உலகத்தின் மறு முனையை நோக்கிச் செல்லும் பயணம் கடைசியில் ஓர் ஏரிக்கரையில் முடிகிறது. வழிநெடுவே அவன் சந்திக்கும் அனுபவங்களை இயற்கையோடு கலந்து வர்ணித்து நாவல் எழுதப்பட்டுள்ளது. கதையின் நாயகனுக்கு பயணம் முழுவதும் தனிமை துணைக்கு வரும். அந்த வெறுமையின் சூனியத்தை பவுத்த மரபின் தத்துவங்களாக நாவலின் இறுதிவரிகள் வரை ஆசிரியர் பயன்படுத்தியிருக்கிறார்.

1996 ஆம் ஆண்டு இத்தாலியின் எழுத்தாளர் அலெசாண்ட்ரோ பாரிக்கோ (Alessandro Barico) என்பவர் எழுதிய இந்த நாவலை சுவைமாறாமல் எழுத்தின் வசீகரத்தை அப்படியே காட்சிப்படுத்தி பிரெஞ்சு  இயக்குநர் ஃப்ரான்கோயிஸ் கியார்த் (Francois Girard) திரைப்படமாக எடுத்திருந்தார். மைக்கல் ஃபிட் நாயகனாக நடிக்க நாவலின் வரிகளை உயிரோட்டமாக கண்முன் கொண்டுவந்து பலரது பாராட்டுகளையும் பெற்றது இந்த திரைப்படம்.


கடிதத்தை படித்த ஹெர்வே ஜான்கர் ஜப்பானுக்கு திரும்பிச் சென்றானா? அங்கு முன்பு சந்தித்த அதே பெண்ணை கண்டுபிடித்தானா? அவள் எழுதிய கடிதத்தின் வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்தானா? புத்தகம் அல்லது திரைப்படத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளுங்கள்.