என் பெயர் மரியாட்டு.


லகமெங்கும் கொட்டிக் கிடக்கும் தன்னம்பிக்கை புத்தகங்கள் ஏராளம் இருக்கின்றன. விளையாட்டு, சினிமா, தொழில், அரசியல் என பல துறைகளில் சாதித்தவர்களின் புத்தகங்கள்தான் இன்று அதிகமாக விற்பனையாகின்றன. வாசிக்கத் தொடங்கிய புதிதில் அவ்வாறான புத்தகங்களை அதிகமாக வாங்கியிருக்கிறேன். அவர்களின் தன்னம்பிக்கை கதைகள் ரசிக்கத் தக்கவையாகவும், செய்தியைப் போலவும், பள்ளிப் பாடமாகவும் அல்லது திரைப்படமாகவும் இருந்திருக்கிறது என்பதைத் தவிர வேறெந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. புத்தகங்களுக்கான தேடுதல் தொடங்கியபோது எளிய மனிதர்களைப் பற்றி வாசிக்க நேர்ந்தது. அவர்கள் வாழ்வியலோடு கலந்த தன்னம்பிக்கை அனுபவங்களை உணர முடிந்தது. அப்படி வாசித்து உணர்ந்த ஒருத்தியின் வாழ்வியல் கதைதான் "The Bite of the Mango" தமிழில் என் பெயர் மரியாட்டு. இன்றளவும் தோற்றுப் போகும் சில தருணங்களில் இந்த நிஜக்கதையின் நாயகி மரியாட்டுவை (Mariatu Kamara) மனதில் நினைத்துக் கொள்வேன். அவள் வாழ்க்கையில் அந்த நிமிடத்தில் அவள் பெற்ற தன்னம்பிக்கை என் தோளிலும் தொற்றிக்கொள்ளும்.

சரி!...

யார் அவள்? 

அவள் கதைதான் என்ன? 

அன்று அவளுக்கு என்ன நிகழ்ந்தது? 

இன்று அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்?...

அன்று:

தென்னாப்பிரிக்காவின் மேற்கு கரையோரம் இருக்கும் அழகிய நாடு சியாரா லியோனி (Sierra Leone). இயற்கை வளங்களுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத அந்த நாட்டைச் சுற்றி கழுகுகள் நோட்டமிட, அரசியல் ஊழல், உள்நாட்டுபோர் என கொஞ்சம் கொஞ்சமாக சிதையத் தொடங்கியது. அந்த நாட்டில் யோங்க்ரோ என்ற கிராமத்தில் 1986 ஆம் ஆண்டு மரியாட்டு பிறந்தாள். பூக்கள், மழை, தென்றல், வயல்கள், ஆறுகள் என பட்டாம்பூச்சியாக பறந்த அவளை, அவளது தந்தை குழந்தையில்லாத தன் சகோதரிக்கு தத்துக்கொடுக்க, விதி அவளுக்கான தன் ஆட்டத்தை தொடங்கியது. சமுதாய கேடுகெட்ட பழக்கத்தினால் பண்ணிரண்டை தாண்டாதபோது வயதான ஒருவருக்கு மரியாட்டுவை அவளது அத்தை திருமணம் செய்துவைத்தார். இதற்கிடையில் நாட்டில் உள்நாட்டு போர் தொடங்க RUF (Revolutionary United Front) என்ற அமைப்பினர் ஒவ்வொரு கிராமமாக சென்று பொதுமக்களை அழிக்கத் தொடங்கினர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அவர்களின் ஆட்டத்தோடு ஆளும் அரசாங்கமும் ருத்ரதாண்டவமாட பொதுமக்களின் அற்றாட வாழ்வு கேள்விக் குறியானது. மரியாட்டு வசிக்கும் கிராமத்தையும் விட்டுவைக்காத அவர்கள் ஒருநாள் அங்கும் நுழைந்தனர். வயதானவர்கள் முதல் குழந்தைகள், கற்பிணி பெண்கள் வரை அனைவரையும் கொன்று அனைத்தையும் அழித்தனர். சிறுமியான மரியாட்டுவின் இரண்டு கைகளையும் (மணிக்கட்டு வரை) வெட்டி வீழ்த்தி, ஆளும் அரசாங்கத்திற்கு செய்தியாய் அடையாளமாய் தூக்கியெரிந்தனர்.

நீ வளரும்போது உனக்கு விரல்கள் இருக்கக் கூடாது. கைகள் இருக்கக் கூடாது. ஏனென்றால் நீ எதிர்காலத்தில் இந்த அரசாங்கத்துக்கு ஓட்டுப் போடக் கூடாது. உன்னைப் போன்றவர்களை நாங்கள் கொல்ல மாட்டோம். கைகளைத்தான் வெட்டுவோம். அப்பொழுதுதான், நாட்டை ஆளுகின்ற அராஜக அதிபருக்கு, நீ ஓட்டுப் போட முடியாது என்று ஒருவன் கத்தியது, காதில் விழுந்தது.

- புத்தகத்திலிருந்து

மயங்கிய நிலையில் கைகள் வெட்டுப்பட்டு குருதி கொட்ட விழித்த மரியாட்டுவிற்கு வாழ்க்கை கொஞ்சம் மிச்சமிருந்து. அதனை துரத்தி அவள் எழுந்து ஓட ஆரம்பித்தாள். வலியோடும் பசியோடும் மயக்கத்துடனும் காடுமேடுகள் தாண்டி சுமார் 45 மைல்கள் பயணித்து, ஒவ்வொரு இடத்திலும் தப்பித்து, நாட்டின் தலைநகரான பிரீடவுணை அடைந்தாள். அவளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது சிறிதுகாலத்திற்குப் பிறகு அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்ட அவள் ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தாள். கைகளை இழந்த அவளுக்கு தன்னம்பிக்கையாக பிறந்த அந்த குழந்தையும் இறந்துவிட ஒட்டுமொத்த நிம்மதியையும் அவள் தொலைத்திருந்தாள். அகதிகள் முகாமில் கொடுக்கும் உணவும் இடமும் வேறொரு நபருக்கு சென்றுவிட நாட்டின் தலைநகரின் தெருக்களில் அநாதையாக பிச்சை எடுக்கும் நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள்.

இன்று:

மரியாட்டு தற்போது போரினால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளை காக்கும் UNCEF அமைப்பின் நல்லெண்ண தூதராக கனடாவில் வசித்துவருகிறார். மேலும் "Mariyaatu Fountation" என்ற அமைப்பைத் தொடங்கி உலகில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளையும் கல்வியறிவையும் பெற்றுத் தருகிறார். உலகமெங்கும் சென்று போரின் கொடுமைகளை விளக்கும் சிறந்த பேச்சாளராகவும் திகழ்கிறார். 2009 ஆண்டு ஒரு நாட்டின்போர் சாதாரண மனிதர்கள் எவ்வாறு சிதைக்கிறது என தன் அனுபவங்களின் வழியே அவர் பேசிய பேச்சு உலகறியச் செய்தது. ஒரு காலத்தில் தான் பிச்சையெடுத்த தெருவழியே கடந்து சென்று தன் சொந்த நாட்டின்  நாடாளுமன்றத்திலும் அவள் பேசினாள். பின்நாட்களில் மரியாட்டுவின் வாழ்க்கையில் நடந்த துயரங்களுக்காக அவரது நாடு அவளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டது. அவளும் தன் பங்கிற்கு தனது கைகளை வெட்டிய தீவிரவாதிகளை மன்னிக்குமாறு பணிந்தாள். அதற்கு மரியாட்டு பதிலளித்த விதமும் அனைவரையும் கவர்ந்தது.

I Just think it...yes time to let go.. Forgive them... They're also our brothers.. They suffered too...



இரண்டு கைகளையும் இழந்த நிலையில் உயிர் கொஞ்சம் மீதமிருக்க வாழ்க்கைக்காக ஓட அவளுக்கு அந்த நிமிடத்தில் கிடைத்த உத்வேகம் எது?... தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு அகதி நாட்டின் நாடாளுமன்றம் வரை சென்றுவர பட்ட சிரமங்கள் எத்தகையது?... ஒட்டுமொத்த நாடே அவளிடம் மண்ணிப்பு கேட்டது எதனால்?... அதனை தெரிந்துகொள்ள சாதாரண ஒருத்தியின் வாழ்கை மாற்றத்தை, அவளது அனுபவங்களை, கையிழந்த நம்பிக்கையை இந்த புத்தகத்தை வாசித்து உணருங்கள்...

  • The Bit of the Mango
  • Susan Mcclelland
  • என் பெயர் மரியாட்டு
  • ஆனந்த விகடன்.

எழுதவும் படிக்கவும் தெரியாத ஆரம்ப காலகட்டத்தில் மரியாட்டுவை சந்தித்து அவளது அனுபவங்களை கேட்டு இந்த புத்தகத்தை பிரபல பத்திரிக்கையாளர் "Susan Mcclelland" என்பவர் எழுதியிருக்கிறார். மரியாட்டுவின் வாழ்க்கையில் முக்கிய பங்குவசிக்கும் அவர் புத்தகத்தை மரியாட்டுவே தன் கதையை சொல்லுவதைப்போல் படைத்திருக்கிறார். புத்தகத்திற்கு RUF இயக்கத்தை சேர்ந்த திருந்தி வாழும் இளம் தீவிரவாதி ஒருவன் அறிமுக உறை எழுதியிருப்பது தனிச்சிறப்பு. 2008 ஆம் ஆண்டு உலகின் பல மொழிகளில் வெளிவந்த இந்த புத்தகத்தை சுவை மாறாமல் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளார்.