நிலமெல்லாம் ரத்தம் (புத்தகம்) .



இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்றுவரை இது தீர்க்கப்பட முடியாமல் இழுத்துச் செல்வதன் காரணம் என்ன?

இரண்டாம் உலகப்போரில் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு உலகமெங்கும் சிதரிக்கிடந்த யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற அடையாளத்தை கொடுத்தவர்கள் பாலஸ்தீனியர்கள். ஆனால் வரம் கொடுத்தவனின் தலையிலே கை வைத்ததுபோல் இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தை வஞ்சிப்பதேன்?.

பல நூற்றாண்டுகால மதப் பிரச்சனை ஒருபக்கம் இருந்தாலும், 1948 ஆம் ஆண்டிற்குப் பிறகு இஸ்ரேல் என்ற தேசம் தோற்றுவிக்கப் பட்டதிலிருந்து இன்றுவரை அங்கு தினமும் குண்டுவெடிப்பும் கலவரங்களும் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. நமது ஊர் அரசியல் கட்சிகள்போல தீவிரவாத இயக்கங்கள் புதிது புதிகாக முளைத்துக் கொண்டிருக்கின்றன, இவற்றையொல்லாம் பீட்ஸா சாப்பிட்டுக்கொண்டே உலக நாட்டாமைகளும் ஐ. நா சபையும் வேடிக்கை பார்பதேன்.

சொந்த மண்னை இழந்து, பெரும் மக்களை இழந்து, வளங்கள் உடைமைகளை இழந்து, நாங்கள் பாலஸ்தீனியர்கள் என வெளியில் சொல்லக்கூட முடியாது தவிக்கும் பாலஸ்தீன அரேபியர்களுக்கு மற்ற மத்தியகிழக்கு நாடுகள் உதவிக்கு வராதது ஏன்?

சண்டை வேண்டாம் அகிம்சை போதும் என கொள்கையை மாற்றி, மக்களையும் தீவிரவாத இயக்கங்களையும் ஒன்றிணைத்து, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தனி அங்கீகாரம் கிடைக்க பாடுபட்டு ஓரளவிற்கு வெற்றிபெற்ற யாசிர் அராஃபத் என்னும் ஒப்பற்ற தலைவரின் முயற்சிகள் இன்று தோற்றுப்போன காரணம் என்ன?

இத்துணை கேள்விகளுக்கும் விடையளிக்கிறது இந்த புத்தகம்.

ஆதிகாலத்தில் தொடங்கி, தீவிரவாத இயக்கங்கள் தோன்றியது முதல் அதன் செயல்பாடுகள் வரை வெற்றி தோல்வி என ஆராய்ந்து, இஸ்ரேல் ஆட்சியாளர்களின் செயல்பாடுகள், அவர்களின் உளவுத்துறையான மொஸாட்டின் சாகசங்கள், இந்த பிரச்சனையில் உலக நாடுகளின் பங்கு, யாசிர் அராஃபத்தின் தீவிரவாத போராட்டமும் அதை தொடர்ந்த அமைதிப் போராட்டம் என சிறந்த களப்பணியோடு இந்த புத்தகத்தை அலசி ஆராய்ந்து நடுநிலைமையான அரசியல் வரலாற்று நூலாக தொகுத்திருக்கிறார் ஆசிரியர் பா.ராகவன். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்து பலரது பாராட்டுகளை பொற்றுத்தந்த இந்த வரலாற்றை கிழக்கு பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளனர் தவறாமல் வாசியுங்கள்.

நிலமெல்லாம் ரத்தம்
பா. ராகவன்
கிழக்கு பதிப்பகம்.