கோல்.


நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம். உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம். தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நிச்சயம் யாராவது ஒருவரில் உங்களைக் காண்பீர்கள். உங்கள் பணியிடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தத் துறையாகவும் இருக்கலாம். ஆனால், இந்தக் கதைக்களமான தொழிற்சாலையின் பிரச்னைகளும் நிகழ்வுகளும் உங்கள் பணியிடத்திலும் வாழ்கையிலும் எதிர்ப்படக் கூடியவைதான். அத்தகைய அனுபவத்தை உணர்வை தரக்கூடியது இந்த புத்தகம் "The Goal". 

தொழில்சாலையில் மேனேஜராக பணிபுரியும் Alex Rogo விற்கு அன்றையநாள் மோசமானதாகவே தொடங்கியிருந்தது. வேலை தொழில்சாலை, உற்பத்தி என குடும்பத்தை பாராமல் சுற்றிக்கொண்டிருந்த அவருக்கு அவரது மனைவி Julie Rogo விவாகரத்து விண்ணப்பம் அனுப்பியிருந்தார். போதாதகுறைக்கு நிர்வாக அமைப்பாளர் Bill Peach நலித்து கிடக்கும் தொழில்சாலையின் உற்பத்தியை உயர்த்தவும் தவறினால் தொழில்சாலையை மூடிவிடவும் மூன்றுமாத கெடுவும் விதித்திருந்தார். ஒரு ஆண் மூன்று வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும் எனச் சொல்லுவார்கள் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, பொதுவாழ்க்கை. இந்த மூன்றையும் சமமாக கையாளுபவனே வாழ்க்கையில் வெற்றியடைகிறான். மூன்றிலும் தடுமாறிய இந்த கதையின் நாயகன் Alex Rogo வின் வாழ்க்கையில் சனிபகவான் இடதுகாலை எடுத்துவைத்து மெல்ல நுழைந்தார். 

செய்த தவற்றை உணரவும், பாவங்களிலிருந்து விடுபடவும், தன்னைத்தானே சரிசெய்து கொள்ளவும் சனிபகவானின் பாதம் படவேண்டும் என ஜோதிடத்தில் கூறுவார்கள் அதுபோல கதையின் நாயகன் Alex Rogo தான் செய்த பிழைகளை சரிசெய்து கொள்கிறான். தன்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்களைக் கொண்டு அவனது பேராசிரியர் Jonah உதவியுடன் தொழில்சாலை நிர்வாகத்தில் சில மாற்றங்களை புகுத்துகிறான். கிடைக்கும் சிறிது மணித்துளிகளையும் தன் மனைவி, குழந்தைகள் Dave மற்றும் Sharon வுடன் செலவிடுகிறான். பேராசிரியர் மற்றும் அவன் அன்றாடம் பழகும் நபர்களிடமிருந்து நிர்வாகவியல் பாடங்களைக் கற்கிறான் அந்த அனுபவங்களை தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறான். குறித்த காலக்கெடுவில் Alex Rogo தன் தொழில்சாலையை மேம்படுத்தி பலரது வாழ்க்கைக்கு உதவினானா? விவாகரத்துவரை சென்ற மனைவியுடன் மீண்டும் இணைந்தானா? மேலே கண்ட மூன்று வாழ்க்கையிலும் சாதித்தானா? என்பதை நிர்வாகவியலோடு கலந்து விவரிக்கிறது இந்த புத்தகம். 

நிர்வாகத்திறனை மேம்படுத்த எண்ணற்ற புத்தகங்கள் இருக்கின்றன ஆனால் பழக்கப்பட்ட ஆர்பாட்டமில்லாத ஒரு தனிமனிதனின் கதையின் வாயிலாக சாமானியர்களும் புரிந்துகொள்ளும் அளவிற்கு வெளிவந்த புத்தகங்கள் இருந்ததாக தெரியவில்லை. அந்த வகையில் Eliyahu M. Goldratt எழுதிய இந்த புத்தகம் முதன்மையில் நிற்கிறது. Management Science என சொல்லக்கூடிய நிர்வாக அறிவியலில் புகழ்பெற்றவர் ஆசிரியர் Goldratt அவரது படைப்பில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம்தான் The Goal. நாவலைப்போல் படிக்க எளிதான கதை ஓட்டத்தின் நடுவே நிர்வாகவியலின் சிக்கலான Theory of Constraints (TOC) மற்றும் Bottlenecks போன்ற தந்திரங்களை புகுத்தியிருப்பது அழகு. முப்பது வருடங்களைத் தாண்டியும் இன்றளவும் பலரால் விரும்பி வாசிக்கப்படும் இந்த புத்தகத்தை உலகின் தலைசிறந்த நிர்வாகவியல் புத்தகம் என Time நாளிதழ் கௌரவித்துள்ளனர். பள்ளி கல்லூரி தொடங்கி தொழில்சாலை நிர்வாகம் வரை அனைத்து வாசிப்பு அறையிலும் தவறாமல் இடம்பெற வேண்டிய புத்தகம். வாசியுங்கள், பகிருங்கள், அடுத்த தலைமுறைக்கு பத்திரப்படுத்துங்கள்.