☰ உள்ளே....

Train to Pakistan (புத்தகம்) .


1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது அந்த நேரத்தில்தான் மாபெரும் துயர் இந்தியாவை சூழ்ந்தது. 90 சதவீதத்திற்குமேல் முஸ்ஸீம்கள் வாழும் பகுதியை தனிநாடாக உருவாக்க வேண்டும் என்ற கனவு ஜின்னாவிற்கு இருந்தது. தேசத்தை இரண்டாக பிரிப்பது என்பது தேகத்தை கூறுபோடுவதுபோல் மாறிவிடும் என்ற அச்சம் மகாத்மா காந்திக்கு இருந்தது. எரிகிற கொள்ளியில் எதையாவது எடுத்துக்கொள்ளலாம் என்ற நோக்கம் ஒருசில தலைவர்களுக்கு இருந்தது. எல்லாவற்றையும் முடித்துவிட்டு அக்கடா என நிம்மதியாக சாயும் ஆசை கடைசி வைசிராயான மவுண்ட் பேட்டனுக்கு இருந்தது. யார் எக்கேடு கெட்டால் என்ன? பென்சிலை கூர்தீட்டி வரைபடத்தில் கோடுகிழிக்கும் ஆர்வம் சிரில் ராட்கிளிஃப் என்ற பொறியாளருக்கு இருந்தது. வந்தேமாதரம் என்ற அவல் தீர்ந்தபின் இந்தியர்களின் (பாகிஸ்தானையும் சேர்த்து) வெறும்வாய்க்கு மெல்ல ஏதாவது ஒன்றும் தேவைப்பட்டது. அப்போதுதான் தேசம் இரண்டாக பிரிக்கப்பட்டது.

அதுவரை சகோதரர்களாக வாழ்ந்துவந்த இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்களின் காதுகளுக்கு பிரிவினை என்ற வார்த்தை சென்றடைந்தது. இந்தியா முழுவதும் அவர்கள் பேயாட்டம் ஆட, வேஷம் கட்டத் தொடங்கினர். சுதந்திரத்திற்காக ஊயிரிழந்தவர்களைக் காட்டிலும் சுகந்திரமடைந்த பிறகு இறந்தவர்களின் ஆன்மாவில் இந்தியா - பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகளின் அரசியல் சாசனம் எழுதப்பட்டது. இரண்டாக கூறுபோடப்பட்ட நாட்டின் ஒரு பகுதியிலிருந்து இந்துக்களையும், மறுபகுதியிலிருந்து முஸ்ஸீம்களையும் விரட்டியடிக்கும் மகா புண்ணிய செயல் தொடங்கியது. இன்றுவரை தொடரும் மத கலவரத்திற்கு பிள்ளையார் சுழி அல்லது 786 போடப்பட்ட தருணம் அது.

அந்த தருணத்தில் பஞ்சாபில் ஒரு கிராமம் அமைதியாக இருக்கிறது. அந்த கிராமத்திற்கு பாகிஸ்தானில் இருந்து ஒரு இரயில் வருகிறது அதில் எண்ணற்ற சீக்கிய பிணங்கள் இருக்கிறது . முஸ்லீம்களை பாகிஸ்தான் அனுப்பும் பணி இங்கும் நடைபெறுகிறது அவ்வாறு இங்கிருந்து பாகிஸ்தான் புறப்படுகிறது ஒரு இரயில். பழிக்கு பழியா? பாகிஸ்தான் போகும் இரயிலுக்கு என்ன ஆகப்போகிறது என்பதுதான் இந்த நாவலின் கதை.

பிரிவினை சுதந்திரம் என எதைப்பற்றியும் தெரிந்திராத ஒரு கிராமத்தில் வாழும் இருவேறுபட்ட மதங்களைத் தழுவிய எளிய காதாபாத்திரங்களின் வழியே இந்தியாவின் கறைபடிந்த சுதந்திர நாட்களை காட்டுகிறது இந்த நாவல். கதையின் நடுவே மென்மையான காதல், அரசியல், மதம் , ஆதிகார
வர்க்கத்தின் செயல்பாடுகள், வந்துபோவது அழகு. 1958 - ஆம் ஆண்டு புகழ்பெற்ற எழுத்தாளர் குஸ்வந்த்சிங் எழுதிய இந்த நாவல் பல்வேறுபட்ட விமரிசனங்களுக்கும் ஆய்விற்கும் உட்படுத்தப்பட்டது. 1998 ஆம் ஆண்டு பமீலா ராக்ஸ் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெளிவந்து பல விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.


சுதந்திர காற்றை சுவாசிக்கவும் அதற்காக பாடுபட்டவர்களை நேசிக்கவும் செய்யும் இந்த சுதந்திரதினத்தில் வரலாற்றின் கருப்பு நாட்களைப்பற்றி தெரிந்துகொள்வது நமக்கு படிப்பினையாக இருக்கும். தவறாமல் வாசியுங்கள்.