தொலைதல்.





வாழ்க்கையில் என்றாவது தொலைந்ததுண்டா? (காதலியின் கடைக்கண் பார்வையில் என்று கப்சா விடக்கூடாது) சிறுவயது திருவிழா கூட்டங்கள் மற்றும் மொழிதெரியாத ஊர்களில் சிலசமயம் மாட்டிக்கொண்டு வழி தெரியாமல் விழித்த அனுபவம் அனைவருக்கும் இருக்கும். அதிலிருந்து ஏதோவொரு நம்பிக்கையுடன், யாரோ ஒரு துணையுடன் மீண்டு வந்திருப்போம். இவைகள் இல்லாமல் யாருமற்ற தனி தீவில் நம்மை கொண்டுவிட்டால் நாம் என்ன செய்வோம்? அப்படி, ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டு தனி தீவில் தஞ்சமடையும் ஒருவனின் வாழ்வியல் போராட்டமே இந்த திரைப்படம் "Cast Away".


Chuck Noland (Tom Hangs) ஒரு மென்பொருள் பணியாளன் FedEx post -ல் வேலைசெய்யும் அவனுக்கு Kelly Frears (Halen Hunt) என்ற காதலி உண்டு, சேர்ந்து வாழும் இவர்கள் ஒரு சுபயோகதினத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர். இதற்கிடையில் பணியின் காரணமாக மலேசியாவிற்கு செல்லும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. வழக்கமான கட்டியணைப்பு மற்றும் சில முத்தங்களுடன் விடைபெற்று பயணம் செய்யும்போது அவனது நிர்வாகத்திற்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகி பசிபிக்பெருங்கடலில் விழுகிறது. அனைவரும் இறந்துவிட Chuck Noland மட்டும் தப்பித்து யாருமற்ற தனி தீவு ஒன்றில் கரைசேருகிறான். அவனோடு கரை ஒதுங்கிய சில பொருட்களை சேமிக்கிறான் மேலும் விபத்தில் இறந்த சக ஊழியர்களின் உடலை மீட்டு இறுதிச்சடங்கு செய்கிறான். ஆள்அரவமற்ற அந்த தீவில் தன்னந்தனியாக வாழ பழகுகிறான். தான் பயணித்த திசையையும் இருக்குமிடத்தையும் வைத்து க் கொண்டு நாட்களையும் தப்பிச்செல்லும் வழியையும் கணக்கிடுகிறான். நாட்கள் தொலைகிறது ஒன்றல்ல இரண்டல்ல முழுதாக நான்கு வருடங்கள் கழிகிறது.

பச்சையாக மீன்களை சாப்பிடுவது, நெருப்பு கண்டுபிடிப்பது, வேட்டையாடுவது, தனக்கென ஒரு குகை மற்றும் கழிப்பிடம் அமைத்து காட்டுவாசிபோல் வாழ்வது, வில்சன் கைபந்தை தன் நண்பனாக பாவித்து அதனுடன் பேசி ஆனந்தப்படுவது சண்டையிடுவது, காதலியின் புகைப்படம் கொண்ட லாக்கெட்டை வைத்துக்கொண்டு அவளது நினைவில் வாடுவது என தனிமையின் கொடுமையான நாட்களை அனுபவிக்கிறான். பிறகு தன் முயற்சியால் கடலை கடந்து சொந்த ஊருக்கு திரும்புகிறான். நான்கு வருடங்கள் தீவில் என்ன செய்தான் ? அவன் எப்படி திரும்பினான்? அவன் காதலி என்ன ஆனாள்? சுவாரசியமாக கடக்கும் இந்த திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.



கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் உடல் இளைத்து, ஒரு காட்டுவாசியைப் போல் முடி வளர்த்து, இந்த திரைப்படத்திற்காக Tom Hangs உழைத்திருக்கிறார். Alan Silvestri -யின் இசையும், Don Burgess-ன் ஒளிப்பதிவும் தனிமையின் துயரங்களை அழகாக நமக்கு காட்டுகின்றன. Bettina Peterson என்பவர் FedEx post நிறுவனத்திற்கு அனுப்பும் பார்சலில் திரைப்படம் தொடங்குகிறது. பிறகு விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்து சில பொருட்களோடு அந்த பார்சல் Chuck noland கைக்கு கிடைக்கிறது. அந்த பார்சலை மட்டும் பிரிக்காமல் வைத்திருக்கும் அவன் ஒவ்வொரு முறையும் தீவிலிருந்து தப்பிக்கும்போது தன்னுடன் எடுத்துக்கொள்வான். காற்று இடி மழைக்குகூட அதனை பாதுகாத்து கடைசியில் சொந்த ஊருக்கு திரும்பியபின் அந்த பார்சலை அனுப்பிய நபரிடம் கொண்டுசேர்க்க புறப்படுவான். யாருமற்ற தனி தீவில் நான்காண்டுகாலம் உயிர்வாழவும், எப்படியும் வீடுதிரும்புவோம் என்ற நம்பிக்கையும் அந்த பார்சல் அவனுக்கு கொடுத்திருக்கும். மிகச்சிறிய விசயங்கள் நம் வாழ்க்கையில் மாற்றத்தையும், தன்னம்பிக்கையும் அளிக்கும் என உணர்தியிருப்பார் படத்தின் இயக்குனர் Robert Zemeckis. தவறாமல் பாருங்கள்.

Directed by - Robert Zemeckis
Written by - William Broyles Jr
Music - Alan Silvestri
Cinematography - DonBurgess
Year - 2000.